
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் தூல்பேட் பகுதியில் ஹோலி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது குல்பி, சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகள் அங்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இனிப்புகளில் கஞ்சா கலந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் தூல்பேட் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட இனிப்புகளை ஆய்வு செய்தனர்.
அப்போது திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அங்கு விற்பனை செய்யப்பட்ட குல்பி, சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகளில் கஞ்சா கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை விற்பனை செய்த சத்திய நாராயண சிங் என்கிற விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 100 கஞ்சா கலந்த குல்பி மற்றும் 71 இனிப்புகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.