
ரியோ டி ஜெனீரோ,
பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான நெய்மார் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் இடது முழங்காலில் காயம் அடைந்தார். அதன் பிறகு அவர் பிரேசில் அணிக்காக விளையாடவில்லை.
இந்நிலையில், 2026-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் அமெரிக்க கண்டத்துக்குரிய அணிகளுக்கான தகுதி சுற்றில் பிரேசில் அணி உள்ளூரில் வருகிற 20-ந் தேதி கொலம்பியாவையும், 25-ந் தேதி அர்ஜென்டினாவை அதன் சொந்த மண்ணிலும் எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணியில் முன்கள வீரரான நெய்மார் இடம் பிடித்து இருந்தார். இந்த நிலையில் 33 வயதான நெய்மார் சான்டோஸ் கிளப்புக்காக கடந்த வாரம் விளையாடினார். அப்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதாகவும், அதில் இருந்து மீண்டு முழு உடல் தகுதியை எட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் உலகக் கோப்பை தகுதி சுற்றுக்கான பிரேசில் அணியில் இருந்து நெய்மார் விலகி இருக்கிறார். நட்சத்திர வீரர் நெய்மார் விலகல் அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.