ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம், ஏரல் வட்டாரத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் லாரி வாடகை கேட்டு அதிகாரிகள் பிடிவாதம் செய்வதால் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. மழையில் இந்த மூட்டைகள் நனைந்து சேதமடையும் அபாயம் காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 53 குளங்கள் மூலம் 47 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. கடந்த காலங்களில் முப்போகும் நடைபெற்ற நெல் சாகுபடி, தற்போது ஒரு போகம் மட்டுமே நடைபெறுகிறது. மற்ற காலங்களில் பெரும்பாலும் வாழை சாகுபடியே மேற்கொள்ளப்படுகிறது.
விவசாயிகளுக்கு ஒரு போக நெல் சாகுபடியிலும் நிலங்களை சீரமைப்பது முதல் அறுவடை வரை ஏற்படும் செலவினங்களுக்கு ஏற்ற லாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்கு பிறகு கூடுதல் பொருட்செலவுடன் தங்களது விவசாய நிலங்களை சீரமைத்து விவசாயிகள் கடந்தாண்டு இறுதியில் நெல் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட செம்பூர், தென்திருப்பேரை, மளவராயநத்தம், அப்பன்கோவில், தோழப்பன்பண்ணை, நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் நெல் மூட்டைகள் தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிச் செல்ல விவசாயிகளிடம் கூடுதலாக பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக நெல் மூட்டைகள், லாரிகளில் ஏற்றிச் செல்லப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன. இதுகுறித்து செம்பூரை சேர்ந்த விவசாயி ரமேஷ் கூறுகையில், நிலங்களை சீரமைப்பதில் இருந்து தற்போது அறுவடை வரை வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்துள்ளோம். அறுவடை முடிந்து கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை வாங்கிக் கொண்டாலும், கிலோவுக்கு ரூ.1 என லாரி வாடகை கேட்கின்றனர். இது எங்களுக்கு கூடுதல் செலவு என்பதால் விவசாயிகள் சேர்ந்து வாடகையை தர மறுத்து வருகிறோம்.
இதனால் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு எடுத்துச் செல்லாமல் கொள்முதல் நிலையத்திலேயே போட்டு வைத்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் வட்டாரத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகள் பாதுகாப்பற்ற சூழலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிறிது மழை பெய்தாலும் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடையும் நிலை உள்ளதால் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிபக் கழக குடோனுக்கு சென்றால்தான் எங்களுக்கு பணம் தருவார்கள். மேலும் அறுவடை முடித்துள்ள மற்ற விவசாயிகளிடமும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வார்கள். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு லாரி வாடகை விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
The post ஸ்ரீவைகுண்டம், ஏரல் வட்டாரத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகள்: லாரி வாடகை கேட்டு அதிகாரிகள் பிடிவாதம் மழையில் சேதமடையும் அபாயம் appeared first on Dinakaran.