
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ். மேட்டுப்பாளையத்தில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ள லாரன்ஸ் அங்கு குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ஒய்யாங்குடி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக லாரன்ஸ் குடும்பத்தினருடன் வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று குடும்பத்தினருடன் தென்திருப்பேரையில் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, லாரன்சின் மனைவி கிளாடிஸ் மற்றும் கிளாடிசின் தங்கை மகள் அவினா (5 வயது) இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். திடீரென இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
இதையடுத்து அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.