மீனாட்சி திருக்கல்யாணம் - 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகம்

2 hours ago 3

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் நடைெபறும் திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்ற திருவிழாவாகும். இந்தாண்டு சித்திரை பெருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் (8-ந் தேதி) நடக்கிறது. திருக்கல்யாணம் நடைபெறும் பகுதியில் பக்தர்கள் அமரும் இடம், மேடை அலங்கரிக்கும் பணி உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் திருக்கல்யாணத்தை காண்பதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களில் குறுந்தகவல் வந்தவர்களுக்கு டிக்கெட் கொடுக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கி தற்போது வரை மும்முரமாக நடந்து வருகிறது. 9-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. தேர் அலங்கரிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 8ம் தேதி நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 என 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகிக்கப்படுகிறது. ரூ.200 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 3000 பேரும், ரூ.500 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 2000-க்கும் மேற்பட்டோருக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் புக் செய்த பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கட்டண பாஸ் வழங்கப்படும். சிறப்பு கட்டண சீட்டு பெற மதுரை மேல சித்திரை வீதி பகுதியில் உள்ள பிர்லா விடுதியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article