
சென்னை,
தமிழ்நாடு அரசால், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 2007-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இவ்வாரியம் அவ்வப்போது மறுசீரமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் அரசு அலுவலர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டுள்ளது. இவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுவர்.
அதன்படி தற்பொழுது புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால் பார்வையற்றோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், கை/கால் இயக்க குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் மற்றும் புற உலக சிந்தனையற்ற/மதி இறுக்கமுடையோர், மூளை முடக்குவாதம், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர், கற்றல் குறைபாடுடையோர், மனநல பாதிப்பு, இரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் இவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இவ்விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரின் பரிந்துரையுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் வழியாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், சென்னை-600 005, என்ற முகவரிக்கு 30.05.2025 தேதிக்குள் அனுப்பிவைத்திட ஏதுவாக விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 23.05.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.