
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை அருகிலுள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் விரிவாக்க பணிகளுக்கான ஆரம்ப கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தையும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மருத்துவமனை விரிவாக்கத்திற்கான கட்டிட அமைப்பு குறித்து கட்டிட பிரிவு பொதுப்பணித் துறையினரிடம் கேட்டறிந்தார்.
புதிய கட்டிடம் அமையும் இடம் நெருக்கடி மிகுந்ததாக இருக்கும் என்பதால் பயன்பாடற்று இருக்கும் பழைய தாலுகா அலுவலக கட்டிடங்களை இடித்துவிட்டு போதிய இடவசதியுடன் மருத்துவமனை விரிவாக்க கட்டிடம் அமைய வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு என புதுக்குடியில் செயல்படும் புதிய தாலுகா அலுவலகம் அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தீயணைப்புத் துறையினர் அங்கு உடனடியாக செல்ல வேண்டும் எனவும் கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், பழைய தாலுகா அலுவலகம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டுமென கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னசங்கர், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆத்திகுமார் மற்றும் பொதுப்பணித்துறையினர் உடன் இருந்தனர்.