
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்ட முகாம் வருகிற 15-ந்தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 14-ந் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலும் வருகிற 15-ந்தேதி 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தொடங்குகிறது. இந்த திட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 4 கட்டங்களாக 360 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அரசு துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் இடத்துக்கு சென்று வழங்குவதே முகாமின் நோக்கம். முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளை சார்ந்த 46 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட இருக்கின்றன.
மேலும் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகள் குறித்து எடுத்துக்கூறி தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தையும் வழங்கி வருகின்றனர். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் யாராவது இருந்தால், முகாம் நடைபெறும் நாளில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம். அந்த மனுக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு 45 நாட்களில் உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.