டியூக்ஸ் பந்து விவகாரம்: இந்த 2 மாற்றங்களை செய்யலாம் - இந்திய முன்னாள் கேப்டன்

6 hours ago 1

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை நெருங்கிய நிலையில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த தொடரில் டியூக்ஸ் வகை பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்து அதன் வடிவமைப்பை சீக்கிரம் இழந்து விடுகிறது. நேற்றைய ஆட்டத்தில் 80-வது ஓவருக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்பட்ட போதிலும் அதன் தன்மையும் விரைவாக மாறியது. இதனால் பந்தை மாற்றக்கோரி இந்திய அணியினர் அடிக்கடி நடுவரிடம் முறையிட்டனர். இதையடுத்து 90.4-வது ஓவரிலும், 98.4-வது ஓவரிலும் பந்து இரண்டு முறை மாற்றப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. பல முன்னாள் வீரர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 2 மாற்றங்களை செய்யலாம் என இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே யோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "பந்து மென்மையாகி விட்டது அல்லது தன்மையை இழந்து விட்டால் பந்தை மாற்றுவது நியாயமானதுதான். அந்த சமயத்தில் ஏதாவது நிச்சயமாக செய்ய வேண்டும். ஆனால் பந்துகள் 10 ஓவர்கள் கூட நீடிக்கவில்லை என்றால், மீண்டும் மீண்டும் பந்தை மாற்றுவது நல்லதல்ல. அது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, பந்திற்கும் கூட.

எனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மாதிரியான டியூக்ஸ் பந்துகளை நீங்கள் மீண்டும் கொண்டு வருவது நியாயமானது என்று நான் நினைக்கிறேன். அதேபோல பந்தின் மீது எச்சிலை பயன்படுத்த மீண்டும் அனுமதிக்க வேண்டும். அது நிச்சயமாக உதவும். பந்தை பளபளப்பாக்கி குறைந்தபட்சம் அதை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய உதவும்" என்று கூறினார். 

Read Entire Article