திருவள்ளூர்: ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவர்களின் ‘மறுசுழற்சி மற்றும் வகுப்பறைப் புரட்சி’ என்ற ‘மாற்றத்தைக் கொண்டு வருவோம்’ பேரணி நடைபெற்றது. திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்ற நிகழ்ச்சியில் ‘மறுசுழற்சி மற்றும் வகுப்பறைப் புரட்சி’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றியும், மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றியும், மறுசுழற்சியினால் விளையும் நன்மைகளைப் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பள்ளி தாளாளர் ப.விஷ்ணுச்சரண் உத்தரவின் பேரில் முதன்மை செயல் அலுவலர் மோ.பரணிதரண் மேற்பார்வையில் மாபெரும் பேரணியை நடத்தினர்.
பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. அப்போது நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டி பேசினார். நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு மாணவர்களுக்கு மறுசுழற்சி மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், பள்ளி துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியை சுஜாதா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ தலைவி கேத்தி பிரசன்னா மறுசுழற்சிக்கான உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
The post ஸ்ரீ நிகேதன் பள்ளியில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் பேரணி appeared first on Dinakaran.