தண்டையார்பேட்டை: சென்னை மண்டல அஞ்சல்துறை சார்பில், பொது அஞ்சலகத்தின் நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை வெளியிடும் நிகழ்ச்சி பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள பொது அஞ்சலகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பொது அஞ்சலக முதன்மை அலுவலர் மதுரிமா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மனோஜ், தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சங்க தலைவர் ரோலாண்ட்ஸ் நெல்சன், சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் ஆகியோர், பொது அஞ்சலகத்தின் நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரையை வெளியிட்டனர்.
நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை என்பது சுற்றுலா மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலகங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அஞ்சல் முத்திரையாகும். வழக்கமான அஞ்சல் முத்திரைகள்போல் இல்லாமல் ஓவிய அஞ்சல் முத்திரைகளுக்கு தனித்துவம் உண்டு. தமிழ்நாட்டில் இதுவரை 51 நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை பொது அஞ்சலகத்திற்கு நிரந்தர ஓவிய முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய ”தபால் பெட்டி எழுதிய கடிதம்” என்ற நூல் தபால்காரர்களுக்கு வழங்கப்பட்டது.
நிருபர்களிடம் சென்னை மண்டல அஞ்சல் இயக்குனர் மனோஜ் கூறுகையில், ”வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது. அஞ்சலகத்தில் பல்வேறு விதமான சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தாய்மார்களுக்கு பாலூட்டு அறையும் உள்ளது. பொதுமக்களுக்கு அஞ்சல் துறை சார்பில் பல்வேறு பணிகளை செய்து தருகிறோம்” என்றார். பொது அஞ்சலக துணை தலைவர் கமலா நன்றி கூறினார். இதில், அஞ்சலக அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post சென்னையில் 239 ஆண்டு பழமையான பொது அஞ்சலக ஓவிய முத்திரை வெளியீடு appeared first on Dinakaran.