
கொழும்பு,
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடமும், இலங்கை 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா களம் இறங்கினர். இதில் ஸ்மிருதி மந்தனா ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் பிரதிகா ராவல் 30 ரன், அடுத்து வந்த ஹார்லீன் தியோல் 47 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய மந்தனா சதம் அடித்த நிலையில் 116 ரன்களில் அவுட் ஆனார்.
தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா ஹோஷ் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோட்ரிக்ஸ் 44 ரன்னிலும், ரிச்சா ஹோஷ் 8 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து தீப்தி சர்மா மற்றும் அமஞ்ஜோத் கவுர் களம் புகுந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 342 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 116 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் தேவ்மி விஹங்கா, சுகந்திகா குமாரி, மல்கி மதரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை ஆட உள்ளது.