தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி.. முதுமலைக்கு கொண்டுசெல்லப்பட்ட குட்டி யானை

2 days ago 5

கோவை,

நீலகிரி, கோவை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு, அதன் உடல் நலனை பாதுகாப்பதுடன் மீண்டும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் சில சமயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், அதில் பலன் கிடைக்காத போது முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறு தாயை பிரிந்து தவிப்பது மற்றும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை பராமரிக்கும் மையமாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு முகாம் திகழ்கிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் தாயை பிரிந்து ஒரு மாத ஆண் குட்டி யானை தவித்தது.

முதுமலையில் பராமரிப்பு

இதை கண்ட வன ஊழியர்கள் குட்டி யானையை மீட்டு தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து காட்டு யானைகள் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க முயன்றனர். ஆனால், சக யானைகள் சேர்க்க மறுத்தது. இதையடுத்து குட்டி யானையை மீட்டு முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமுக்கு குட்டி யானை கொண்டு வரப்பட்டது. பின்னர் தனி அறையில் குட்டி யானையை வன அதிகாரிகள் அடைத்து, 3 வேளையும் திரவ உணவுகள் அளித்து பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, பிறந்து ஒரு மாதமே ஆன குட்டி யானை ஆரோக்கியத்துடன் உள்ளது. இதனால் பராமரிப்பு பணி மேற்கொள்ள தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் முகாமில் 29 வளர்ப்பு யானைகள் உள்ளது என்றனர். 

Read Entire Article