
புதுடெல்லி,
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால் நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவியது. இதனால், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இன்னும் 12 லீக் மற்றும் 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 16 ஆட்டங்களை நடத்த வேண்டி உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியை மீண்டும் தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி ஐ.பி.எல். நிர்வாக குழு உறுப்பினர்களும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, ஐ.பி.எல். தொடரை வருகிற 16 அல்லது 17-ந்தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தங்கள் அணி வீரர்களை திரும்ப அழைக்கும்படி 10 அணி நிர்வாகங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிக்கான அட்டவணை இன்று அவர்களிடம் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், எஞ்சிய ஐ.பி.எல். தொடருக்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நேற்று மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் சுப்மன் கில், முகமது சிராஜ் ஷெர்பேன் ரூதர்போர்டு, ககிசோ ரபாடா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி கண்டு 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.