
சென்னை,
இந்தியாவில், ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக, மார்வெல் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் மார்வெல் படைப்புகளுள் ஒன்றாக உருவானதுதான், ஸ்பைடர் மேன் படங்கள்.
இதன் முதல் பாகமான ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங்கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, 2-வது பாகமாக 'ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம்' படமும், கடைசியாக 3-வது பாகமாக 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' படமும் வெளியாகின. இப்படங்களில் கதாநாயகியாக ஜெண்டயா நடித்திருந்தார். இந்த 3 பாகங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.
இதனையடுத்து 4-வது பாகமும் உருவாகி வருகிறது. இதிலும், டாம் ஹாலண்டே ஸ்பைடர் மேனாக நடிக்கிறார். மேலும், ஸ்பைடர் மேன் நோ வே ஹோமில் கேமியோ ரோலில் நடித்திருந்த ஆண்ட்ரூ கார்பீல்ட், இதிலும் நடிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் ஸ்பைடர் மேன் 4-வது பாகத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி உலகளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.