சென்னை: ஸ்பேட் எக்ஸ் திட்டத்தின் பிரதான பணியான விண்கலன்களை ஒன்றிணைக்கும் பணி ஜன.7 தேதி செயல்படுத்தப்படும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் ஸ்பேட்எக்ஸ் திட்டத்தை செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது. இந்த திட்டத்தில் ஸ்பேட்எக்ஸ் ஏ, ஸ்பேட்எக்ஸ் பி என 2 விண்கலன்கள் விண்ணில் செலுத்தி அவை இரண்டையும் ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒரே புவி வட்டப்பாதையில் பயணிக்க வைத்து பின்னர் 2 விண்கலன்களையும் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஸ்பேட்எக்ஸ் ஏ, ஸ்பேட்எக்ஸ் பி விண்கலன்களை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்ட்டில் பொருத்தி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி 15 விநாடிகளில் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 15 நிமிடம் 15 விநாடிகளில் ஸ்பேட்எக்ஸ் பி விண்கலனும், 15 நிமிடம் 20 விநாடிகளில் ஸ்பேட்எக்ஸ் ஏ விண்கலனும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியில் இருந்து 475 கி.மீ. உயரத்தில் திட்டமிடப்பட்ட புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
விண்கலன்கள் ஒன்றிணைக்கப்பட்ட பின் ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொரு விண்கலத்திற்கு மின் ஆற்றல் (எல்க்ட்ரிகல் எனர்ஜி) அனுப்பப்படும். இது சரியாக செயல்படுத்தப்பட்ட பின் தான் ஸ்பேட்எக்ஸ் சோதனை திட்டம் முழுமையாக வெற்றியடையும். இந்நிலையில் விண்கலன்கள் ஒன்றிணைக்கும் பணியான ஸ்பேஸ் டாக்கிங் வரும் ஜன.7ம் தேதி அன்று செயல்படுத்தபடும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்ரீஹரிக்கோட்டாவில் இதுவரை 99வது ராக்கெட் ஏவதல் நடைபெற்றுள்ளது. 2025 புத்தாண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.
முதலாவதாக ஜனவரியில் 100வது ராக்கெட்டை ஏவும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளோம். ஸ்பேடெக்ஸ் திட்டத்திற்கான முதல்கட்டத்தை வெற்றிகரமாக செயலடுத்தியுள்ளோம். ஸ்பேஸ் டாக்கிங் வரும் ஜன.7ம் தேதி அன்று செயல்படுத்தபடும். இனி வரும் காலங்களில் பல பெரிய, சிக்கலான ஸ்பேஸ் டாக்கிங் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் 7 நாட்கள் எடுக்கும் நிலையில், இனி வரும் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும், குறிப்பாக மனிதர்களை அனுப்பும் போது அதிகபட்சம் 12 மணி நேரத்திற்குள் திட்டத்தை செயல்படுத்துவது அவசியம். திட்டத்தை விரைவாக செயல்படுத்தும் போது அதிக எரிபொருள் தேவைப்படும்.
ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தை 3 நாடுகள் வைத்துள்ளது. பெரும்பாலான நாடுகள் விண்வெளி திட்டங்களை செயல்படுத்தினாலும், ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை, இந்தியாவில் 1986ம் ஆண்டே செயல்படுத்த திட்டமிட்டப்பட்டது, ஆனால் அப்போது அதற்கான தேவையில்லை, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது போன்ற திட்டங்களை செயல்படுத்தவே தேவைப்படும், அதனால் இப்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஸ்பேட்எக்ஸ் விண்கலன்களுடன் குறைந்த செலவில் 24 ஆய்வு கருவிகளும் அனுப்பியுள்ளோம். இந்த 24 ஆய்வு கருவிகளும் திட்டமிட்டப்படி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பிடப்பட்ட பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின் போது ஸ்பேட்எக்ஸ் திட்ட இயக்குநர் சுரேந்திரன், ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதல் மைய இயக்குநர் ராஜாராம் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் இருந்தனர்.
The post ஸ்பேட்எக்ஸ் திட்டத்தின் பிரதான பணியான விண்கலன்கள் ஒன்றிணைப்பு பணி ஜன.7ம் தேதி செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் appeared first on Dinakaran.