நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய்: வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

8 hours ago 3

டெல்லி: நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்த முடியும் என பாகிஸ்தான் மட்டுமே கூற முடியும் என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். ‘நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய். மத மோதல்களை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்கிறது’ என தெரிவித்துள்ளார்.

நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, வின் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். அதில்; ‘மே 8ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் படைகள் இந்தியா ராணுவ நிலைகளை தாக்கின.

துருக்கி நாட்டின் தயாரிப்பான ட்ரோன்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. கட்டுப்பாட்டு எல்லைக் கோடு, சர்வதேச எல்லையில் உள்ள நிலைகளை குறிவைத்து பாக். ராணுவம் ட்ரோன்களை அனுப்பியது. பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்களை இந்தியா வழிமறித்து தடுத்து அழித்தது’ என வின் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது; “நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய். மத மோதல்களை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்கிறது. காஷ்மீர் பூஞ்ச்சில் உள்ள குருத்வாராவை தாக்கியது பாகிஸ்தான் படைகள்தான். குருத்வாராக்கள், பள்ளிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது அற்பதனமான நடவடிக்கை. பாகிஸ்தான் தாக்குதலில் பூஞ்ச் பகுதியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பலியாகினர்.

உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவல்களை கொடுத்து திசை திருப்ப முயற்சி செய்கிறது. பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை நிறுத்த சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நாடியுள்ளது இந்தியா. ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி அமெரிக்காவிடம் எடுத்துரைத்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு” என தெரிவித்துள்ளார்.

The post நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய்: வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி appeared first on Dinakaran.

Read Entire Article