மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

9 hours ago 2

மேட்டுப்பாளையம்: நீலகிரி பகுதியில் பெய்த தொடர் மழையால் ஹில்குரோவ்- குன்னூர் இடையே ரயில் பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் ஏராளமான வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஹில்குரோவ்- குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மலை ரயில் பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால், தண்டவாளம் சேதமடைந்தது.

இதனிடையே இன்று காலை வழக்கம் போல 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 184 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் கனமழை காரணமாக ஹில்குரோவ் – குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் ராட்சத பாறை கற்கள் விழுந்த சம்பவம் குறித்து அறிந்து ரயில் கல்லாறு ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், மீண்டும் மேட்டுப்பாளையம் திரும்பி வந்தது. இதனால், ஆர்வத்துடன் ஊட்டியின் இதமான சூழலை கண்டுகளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மலை ரயிலில் முன்பதிவு செய்து, பயணம் மேற்கொண்ட 184 பயணிகளுக்கும் டிக்கெட் தொகை திரும்பி வழங்கப்பட்டது. பின்னர், அனைவரும் மாற்று பேருந்துகள் அல்லது அவர்களது வசதிக்கேற்றவாறு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

The post மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article