திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை ேதரோட்டம் இன்று காலை ேகாலாகலமாக நடந்தது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.தொடர்ந்து சிவபக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக தாயுமானவராய் வந்து மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சியும், சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று மாலை சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ேதரோட்டம் இன்று(9ம் தேதி) காலை கோலாகலமாக நடந்தது. பரிவார தெய்வங்களான விநாயகர், வள்ளி தெய்வானை, சுப்பிரமணியர் ஒரு சப்பரத்திலும், உற்சவர் சோமாஸ்கந்தர், மட்டுவார் குழலம்மை தனித்தனி தேர்களிலும் காலை 5.45 மணிக்கு மேஷ லக்னத்தில் எழுந்தருளினர்.காலை 6.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து சுவாமி தேரும், அம்மன் தேரும் அடுத்தடுத்து புறப்பட்டு சென்றது. தேர் முன் மேள வாத்தியங்கள் முழங்க லட்சுமி யானை சென்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமசிவாய கோஷம் முழங்க தேர்களை வடம்பிடித்து இழுத்தனர். தேர்கள் கீழ ஆண்டாள் வீதி, சின்னகடை வீதி, என்எஸ்பி ரோடு, நந்தி கோயில் தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக மலைக்கோட்டை வெளிவீதியில் பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தவாறு நிலையை அடைந்தது.
இதைதொடர்ந்து மாலை வரை சுவாமியும், அம்பாளும் தேரில் இருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.பின்னர் இரவில் தேரில் இருந்து சுவாமி- அம்பாள் இறங்கி கோயில் ஆஸ்தான மண்டபம் சென்றடைகின்றனர். 14ம் தேதி மாலை 6 மணிக்கு சண்டிகேஸ்வர் வீதியுலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருப்பைஞ்சீலியில் தேரோட்டம்;
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்தி பெற்ற நீலிவனநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுகான தேர்த்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 5ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. நேற்று இரவு தங்க குதிரை வாகனத்தில் சாமி எழுந்தருளி வையாளி கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. அதிகாலை சுவாமி தேரில் எழுந்தருளினார். மதியம் 2 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
The post ஓம் நமசிவாய கோஷம் முழங்க மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.