'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' முதல் 'வெனஸ்டே' வரை: இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 வெப் தொடர்கள்

5 hours ago 2

சென்னை,

2025 ஆம் ஆண்டில் பல ரசிகர்களுக்குப் பிடித்தமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வெப் தொடர்கள் வெளியாக தயாராகி இருகின்றன.

அதன்படி, 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' முதல் 'வெனஸ்டே' வரை பல வெப் தொடர்களின் வெளியீடுகள் பார்வையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 வெப் தொடர்களை தற்போது காண்போம்.

வெனஸ்டே: சீசன் 2 (நெட்பிளிக்ஸ் - ஆகஸ்ட் 6)

அமெரிக்க 'கார்ட்டூனிஸ்டு' சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட காமெடி, திரில்லர் வகை தொடர் 'வெனஸ்டே'. இதனை பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி இருந்தார். மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் கடந்த 2022-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

ஜென்னா ஒர்டேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், 4 எம்மி விருதுகளையும் வென்றது. தற்போது இதன் 2-வது சீசன் உருவாகி இருக்கிறது. இதில், வெனஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா, எனிடாக எம்மா மியர்ஸ், பியான்காவாக ஜாய் சண்டே, யூஜினாக மூசா மொஸ்டாபா, அஜாக்ஸாக ஜார்ஜி பார்மர், டைலராக ஹண்டர் டூஹான் , மோர்டிசியா ஆடம்ஸாக கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ், கோமஸ் ஆடம்ஸாக லூயிஸ் குஸ்மான், பக்ஸ்லி ஆடம்ஸாக ஐசக் ஒர்டோனெஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இவர்கள் மட்டுமில்லாமல், சில புதிய முகங்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, பாரி டார்ட்டாக ஸ்டீவ் புஸ்ஸெமி, கிராண்ட்மாமாவாக ஜோனா லம்லி நடிக்கிறார்கள். இந்த சீசன் 2- பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் வருகிற ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதியும், 2-ம் பாகம் செப்டம்பர் 3-ம் தேதியும் வெளியாக உள்ளது.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்: சீசன் 5 (நெட்பிளிக்ஸ் - நவம்பர் 26)

ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 சீசன்கள் வெளியாகி உள்ளன. தற்போது டான் டிராட்சன்பெர்க் இயக்கத்தில் 5-வது சீசன் உருவாகி வருகிறது. இது இந்த தொடரின் கடைசி சீசன் ஆகும்.

முதல் எபிசோட் வருகிற நவம்பர் 26-ம் தேதியும், 2வது எபிசோட் டிசம்பர் 25-ம் தேதியும், இறுதி எபிசோட் டிசம்பர் 31-ம் தேதியும் வெளியாக உள்ளன.

வொண்டர் மேன் (டிஸ்னி+ - 2025)

மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோவை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் வெப் தொடர் வொண்டர் மேன். இந்தத் தொடர் மார்வெல் டெலிவிஷன் மற்றும் பேமிலி ஓன்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி விட்சர்: சீசன் 4 (நெட்பிளிக்ஸ்)

"தி விட்சர்" சீசன் 4 நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது. இதில், ஹென்றி கேவில் கதாநாயகன் ஜெரால்ட் ஆப் ரிவியா கதாபாத்திரத்தில் இருந்து விலகியநிலையில், லியாம் ஹெம்ஸ்வொர்த் அந்தப் பாத்திரத்தில் நடிக்கிறார். சீசன் 4-க்கான படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது, ஐந்தாவது சீசனுடன் இந்தத் தொடர் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலியன்: எர்த் (எப் எக்ஸ்/ஹுலு - ஆகஸ்ட் 12)

"ஏலியன்: எர்த்" என்பது ரிட்லி ஸ்காட்டின் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த கிளாசிக் திரைப்படமான "ஏலியன்" திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இது ஆகஸ்ட் 12 அன்று ஹுலுவில் மற்றும் எப் எக்ஸில் வெளியாக உள்ளது.

Read Entire Article