
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை. இந்த எச்சரிக்கைக்கு கவனம் செலுத்துவோர்க்கு நன்றி." என்று பதிவிட்டுள்ளார்.
எனினும், எந்த மாதிரியான நடவடிக்கைகள் அமெரிக்க விரோதக் கொள்கைகள் என்பது பற்றி டிரம்ப் எதுவும் விரிவாக பதிவிடவில்லை. டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றத்தில் இருந்தே பல்வேறு நாடுகள் மீதும் அதிரடியாக வரி விதித்து வருகிறார். டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.bஇதில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் கூடுதல் உறுப்பினர்களாக இணைந்துள்ளன.பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று தொடங்கியது. இத்தகைய சூழலில்தான் மேற்கண்ட எச்சரிக்கையை டிரம்ப் விடுத்து இருக்கிறார்.