‘‘ஸங்கல்ப ஸித்த சாயி’’

3 months ago 18

அனுபூதியடைந்த மகான் ஒருவரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு. அது மன அமைதி, தூய்மை ஆகியவற்றைத் தூண்டி, உண்மையான மெய்ப்பொருளின் தன்மையை விளக்கி, புலன்கள் வெளிஉலகத்திற்கு வசப்படும் தன்மையை விலக்கி, புதுவேகத்துடன் ஆன்மிகப் படிநிலைகளில் முன்னேறும்படி செய்கிறது.

ஆனால் ஆன்மிக சாதகர்கள் செல்ல வேண்டிய உண்மையான திசைக்கு மாறாகச் சென்றால் ஆன்மிக வழியை இழந்தவர்கள் ஆவர். சரியான வழியை அறியாத அறிவு, தவறான வழியின் மயக்கம் இவற்றால் அவர்கள் பாதிப்படைகின்றனர். அவர்களின் வழிகாட்டிகளும் திசைமாறியவர்களாகவே அமைகின்றனர். உலகப் பெருமையை நினைத்து மந்திர சித்தியினால் சில அற்ப சக்திகளைப் பெற்று தன்னை உயர்ந்தோர் என நினைத்துக் கொண்டு ‘தமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்குகிறார்கள்’.

‘‘குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்’’

என்று ‘அபக்குவன்’ நிலையை திருமந்திரம் விளக்கிக் கூறுகிறது. தவம், ஞானம் என்னும் இருவகை நிலைகளிலும் உள்ள போலிவேடம், உண்மை வேடம் என்னும் இவற்றை திருமூலர் 23 திருமந்திரங்களால் விளக்குகிறார். ‘அபக்குவன்’ ஆன பக்குவம் இல்லாத சிலர் நல்ல குருவை நாடாமல், போலி குருவைக் குருவாகக் கொண்டு பயன் பெறுவதை ஏளனம் செய்கிறார். இங்கு ‘குருடு’ என்பது அவர்களின் ‘அறியாமை’ யைக் குறிக்கும்.

அருணகிரிநாதர் காலத்தில், ரசவாதத்தில் அதாவது உலோகங்களைப் பொன்னாகச் செய்வதில் விருப்பமுள்ளவர்கள் நிறைய இருந்துள்ளனர். அந்த ஆசை மக்களின் பேராசையென்றும் அந்த பயனற்ற ஆசையை அறவே ஒழித்து, உண்மைப் பெருநிலையைத் தெரிந்து கொள்வதற்கு உற்ற வழி முருகன் அருளே. அந்த அருளைக் கொடுப்பது திருப்புகழே என மக்களுக்கு அறிவுரை கூறவே, ‘சித்து வகுப்பு’ பாடுகிறார் அருணகிரிநாதர்.

‘‘அடல் புனைந்த வேலும் மயிலும் என்றும் வாழி
அரிய தொன்று கூற அருகிருந்து கேண்மின்’’

‘‘வலிமை வாய்ந்த ‘வேலும் மயிலும்’ எஞ்ஞான்றும் வாழ்வதாக! அருமையான விஷயம் ஒன்று சொல்லப் போகிறேன். அதை என்பக்கத்தே இருந்து கேட்பீர்களாக!” என்று தொடங்கி 119 மூலிகைகள் பற்றிய ஒரு பட்டியலைக் கொடுத்து இந்த மூலிகைகள் மூலம் நீங்கள் பெறும் சித்துக்கள் எல்லாம் பெரிதல்ல. இந்த சித்துக்கள் மூலம் ஜீவ சிவ ஐக்கியத்தை பெறமுடியாது என்றும் எடுத்துக்காட்டுகிறார்.

‘‘வினைப்பகை அறுப்பவன் நினைத்தது முடிப்பவன்
மனத்துயர் கெடுத்து எனை வளர்த்த அருள் க்ருபைக் கடல்
வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்த ப்ரசித்தரே’’

வினை என்னும் பகையை அறுப்பவன். அடியார்கள் நினைத்த எண்ணங்களை நினைத்தபடியே முடித்துத் தருபவன். மனவேதனைகளைக் கெடுத்து என்னை இந்த உயர்நிலைக்கு கொண்டு வந்து திருவருள் பாலித்த கிருபைக் கடலானவன். அந்த வேலாயுதக் கடவுளுக்கு வாய்த்த என்னால் பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்களை ஆராய்ந்து ஓதுபவர்களே சித்தர்களுள் பேர் பெற்ற சித்தர்களாம். சகல சித்திகளும் வாய்ந்த பிரசித்தர்களாம். இதுவே,

‘அறுமுகனின் திருஆணை’ என்று உறுதிப்
படக் கூறுகிறார் அருணகிரிநாதர்.

தமிழில் சிற்றிலக்கிய வகைகளுள் கலம்

பகம் ஒன்று. பல பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று கூறுவர். ‘களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கத் தொடையல்’ என்று திவ்ய பிரபந்தம் திருப்பள்ளியெழுச்சி கூறுகிறது. கலம் என்பது பன்னிரண்டு. பகம் என்பது அதில் பாதி. அதாவது ஆறு. இரண்டும் சேர்ந்து பதினெட்டு. பதினெட்டு உறுப்புகளால் பாடப்படும். அதில் சித்து, சம்பிரதம் என்னும் இரு உறுப்புகள் உள்ளன. சித்து இரசவாதம் (Alchemy) புரியும் சித்தர் ஒருவர் கூற்றாக அமைவது.

சம்பிரதம் என்பது இந்திரஜாலம் (Magic). இக்கலையில் வல்லவர் தம் பெருமைகளைத் தாமே எடுத்துக் கூறுவதாக அமைவது. இது செய்வதற்கு எளிய செயல்களையே செயற்கரிய செயல்களாகக் கூறுதல் இதன் இயல்பாகும். (சம்பிரதம்-பொய்)‘‘எட்டு வரையைக் கடலை முட்டியுள் அடக்கிடுவேன்’ என்று சம்பிரதம் எனும் உறுப்பை, மதுரைக் கலம்பக்தில் குமரகுருபர சுவாமிகள் பாடுகிறார். இது சிலேடையாக அமையும். அதாவது எட்டு மலைகளையும் கடலையும் மூடிய கைக்குள் அடக்கிடுவேன் என்ற ஒரு பொருளையும், எள், துவரை, கடலை என்னும் தானியங்களைக் கைப்பிடிக்குள் அடக்கி விடுவேன் என்ற மற்றொரு பொருளையும் தருவதைக் காணலாம்.

‘‘ஐவகைத் தொழிலும் என்பால் அளித்தனை அது கொண்டு இந்நாள்
செய்வகை தெரிவித்து என்னைச் சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும்’’

எனவரும் திருவருட்பாவால் வள்ளலாரின் திருவருள் நிலையை உணர்ந்து கொள்ளலாம். ‘‘எண்வகைச் சித்திகளும் நினக்கு ஏவல் செய்வனவாகும். ஆகவே, அவற்றைப் பெற விரும்புவதை ஒழிக என்று கூறிய குருமணியே!’’ என்று திருவோத்தூர் அருட்குரு தோத்திரத்தில் வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

‘‘அட்ட சித்திகளும் நினது ஏவல் செயும் நீ அவை
அவாவி இடல் என்ற மணியே’’

அதாவது சிவஞானச் செல்வம் எய்தியவர்க்கு அட்ட சித்திகளும் வேண்டாதவையும், வேண்டுமாயின் எளிதில் கூடுவதும் ஆகும். ஆனால் அவற்றால் சிவஞான நலம் உண்டாகாது ஆகையால் நீ அவற்றைப் பெற விரும்பற்க என்று தம் குருமணி கூறினார் என்று அட்டமா சித்திகள் பற்றி விளக்கம் தருகிறார் வள்ளலார்.

ஈராக் நாட்டின் பஸ்ராவைச் சேர்ந்த அஹ்மத் கபீர் ரிஃபாயி, (கி.பி.1119 to 1183) ‘சுல்தான்-உல்-ஆரிஃபீன்’ (Sultan-ul-Arifeen – ஞானிகளுள் அரசர்) என்ற உயர்ந்த பட்டத்தைப் பெற்ற இறையியலாளர். கஃபத்துல்லாஹ்வை (காபாவை) தரிசிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றியவுடனே ஃபதாயஹ் (ஈராக்) நகரிலிருந்து காபாவை நோக்கிப் புறப்பட்டார். ஊர் எல்லையைத் தாண்டி சில அடிகள் தூரம் சென்றவுடனேயே காபாவின் ஹரம் பளீரென்று தோன்றியது. அவருடன் சென்ற யாகூப் வியப்படைந்தார். ஆனால் ரிஃபாயி யாகூப்பிடம் இவ்விதம் நான் காபாவைப் பார்க்க விரும்பவில்லை. மீண்டும் ஃபதாயஹ்லிருந்து பல மைல் தூரம் நடந்து வர விரும்புகிறேன் என்றார். இறைவன் அவருக்கு நடத்திய இந்த அற்புதத்தைக் கண்டு ரிஃபாயி, ‘இறைவா இந்த அற்புதம் எனக்கு வேண்டாம்.’ என்று சொல்லிவிட்டு மீண்டும் ஃபதாயஹ் நகருக்குத் திரும்பினார்.

இவ்வாறு அட்டமா சித்திகள் பெற்ற மகான்கள் அற்புதங்களை தொடர்ந்து நிகழ்த்த வல்லவர்கள் எனினும் அவ்வாறு செய்வது கூடாது என்று எண்ணினர். அதனைச் செய்வது இறைவன் ஒருவன் மட்டுமே. தாம் அதற்கான கருவி மட்டுமே என்று கருதினர். அவசியம் கருதித்தான் அற்புதங்களை அவர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர் என்பது கண்கூடு.
இவ்வகையில் இங்கு சொல்லப்பட்ட கருத்துகளைக் கொண்டு அகமத் நகர் மீர்ஜாகாமைச் சேர்ந்த குசபாவ் (கிருஷ்ணாஜி காசிநாத் ஜோஷி) பகவான் ஸ்ரீசாயிநாதரின் அருள் பெற்ற கதையைக் கூறலாம்.

குசபாவ் தத்த மஹராஜ் என்பவரைக் குருவாக அடைந்து, யோகப் பயிற்சிகள் செய்து கொண்டிருந்தார். அதில் அவருக்குத் திருப்தி அளிக்காமல் போகவே குருவிடம் சில சித்திகளைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மந்திரங்களைக் கற்றுக் கொடுக்கும்படி வற்புறுத்தி வந்தார். குரு அதன் மூலம் பெறுபவை தாழ்ந்த அசாதாரண சக்திகள் என்று கூறினார். குசபாவ் அதை மிகவும் விருப்பம் கொண்டு கேட்கவே, சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார் குரு. குசபாவ் அம் மந்திரங்களின் மூலமாக சில சக்திகள் பெற்று, மந்திரம் செபம் செய்த ஒரு இரும்பு வளையத்தைக் கையில் அணிந்து கொண்டார். அதனால் வெறும் கையில் தின்பண்டங்கள் மற்றும் பல பொருட்களை வரவழைத்து எல்லோர்க்கும் கொடுத்து வந்தார். தான் மட்டும் அந்தத் தின்பண்டங் களைச் சாப்பிடக் கூடாது என்பது விதி.

ஒருநாள் அவருடைய குரு, தத்த மஹராஜ் குசபாவுவைக் கூப்பிட்டு ‘இனிமேல் நீ சாயிபாபாவை குருவாக வைத்துக் கொள்’ என்று கூறிவிட்டு இமயமலைக்குக் கிளம்பிச் சென்றார். அவருடைய கட்டளைப்படி குசபாவ் தன்னுடைய 22ஆம் வயதில் சீரடி சென்று பாபாவை தரிசித்தார். பாபா குசபாவுவின் மீது அதிகமான கோபம் கொண்டார். ஒவ்வொரு முறையும் பாபாவைப் பார்க்கச் செல்லும் போது பாபா கோபத்தில் அவரை துவாரகமாயி மசூதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. பாபாவை குருவாக அடைய வேண்டும் என்பதே தம் குருவின் கட்டளை.

ஆனால் பாபா தம் மீது ஏன் கோபமாக உள்ளார் என்று மீண்டும் மீண்டும் யோசித்தார். தம்மிடம் உள்ள அசாதாரண சக்திகளால் தான் பாபா கோபமாக இருக்கிறார் என்று ஒரு நிமிடம் நினைத்தார். எனவே, அந்த இரும்பு வளையத்தை தன் கையிலிருந்து கழற்றி குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு பாபாவைப் பார்க்கச் சென்றார். பாபா அவரை இன்முகத்துடன் வரவேற்றார்.மசூதியின் மூலையில் அமர்ந்து, பகல் முழுவதும் ஸமர்த்த ராமதாசரின் ‘தாசபோதம்’ என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பாபா உத்தரவிட்டார்.

இதனால் சீரடியில் கிடைக்கும் உணவைக் கொண்டு குசபாவ் அங்கேயே தங்கி பாபாவை அடிக்கடி சென்று பார்ப்பார். பாபா ஒருதடவை மூன்று தலைகளைக் கொண்ட ஆளைப் (தத்தாத்ரேயர்) பார்க்குமாறு கூறினார். இதனால் தத்தாத்ரேயரின் இடமான கானகாபூருக்கு அடிக்கடி சென்றார். இதற்கிடையில் குரு சரித்திரத்தையும் நூற்றியெட்டு முறைகளுக்கு மேல் பாராயணம் செய்தார்.

குசபாவ் ஏகாதசி விரதம் இருப்பது வழக்கம். அப்படியொரு ஏகாதசி நாளில் பாபா குசபாவுவை நோக்கி ‘ஏகாதசி நாளில் என்ன சாப்பிடுவாய்’ என்று கேட்டார். குசபாவ் ‘கந்த மூலம்’ என்றார். (கந்த மூலம் என்பது சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற ஒரு கிழங்கு). பாபா வேண்டுமென்றே ‘ஓ காந்தா சாப்பிடுவாயா?’ என்றார். காந்தா என்றால் மராத்தியில் வெங்காயம். எனவே, பாபா ஒரு வெங்காயத்தை எடுத்துக் கொடுத்து இதைச் சாப்பிடு என்றார்.

குசபாவ் பாபாவின் வார்த்தைகளை மீற முடியாமல் ‘தாங்கள் சாப்பிட்டால் நான் சாப்பிடுவேன்’ என்றார். பின்னர் அவர்கள் இருவருமே வெங்காயம் சாப்பிட்டார்கள். கொஞ்ச நேரத்தில் மசூதிக்கு மக்கள் வந்து கொண்டு இருந்தபோது, அவர்களிடம், ‘ஏகாதசியன்று வெங்காயம் சாப்பிட்ட இந்த பிராமணனைப் பாருங்கள்’ என்று கேலி செய்து கொண்டிருந்தார் பாபா. குசபாவ் உடனே ‘பாபா சாப்பிட்டதால் தான் நானும் சாப்பிட்டேன்’ என்று கூறினார். பாபா, ‘ நான் வெங்காயம் சாப்பிடவில்லை. கிழங்கு தான் சாப்பிட்டேன்’ என்று சொல்லி வாந்தி எடுத்தார். அப்போது ‘‘கிழங்குத் துண்டுகள் மட்டும் கீழே விழுந்தன. வெங்காயம் இல்லை”. குசபாவ் இது தான் சமயம் என்று பாபாவின் வாந்தியை பிரசாதாமாகச் சாப்பிட்டு விட்டார்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான் குகை நமச்சிவாயர், உடல் நலம் சரியில்லாத நேரத்தில் உண்ட உணவு செரிக்காமல் வாந்தியெடுத்தார். அதனை அப்படியே தன் கைகளில் வாங்கினார் அவருடைய சிஷ்யர் நமச்சிவாயர். அப்பொழுது குரு, ‘இதனை மனிதர் காலடி படாத இடமாகப் பார்த்துக் கொட்டிவிட்டு வா’ என்று சீடரிடம் சொன்னார். சீடரும் அவ்வாறு செய்ய வெளியே போய்விட்டு வந்தார். அப்பொழுது குகை நமச்சிவாயர், ‘எங்கே கொட்டினாய்’ என்று கேட்க நமச்சிவாயர் தன் வயிற்றைக் காட்டினார்.

‘‘இதோ, இங்கே. இதைவிட மனிதர் காலடி படாத இடம் வேறு எது குருவே!” என்று கேட்டார். அதனைக் கேட்டு அதிசயமடைந்த குகை நமச்சிவாயர், சீடனின் பரிபக்குவ நிலையைக் கண்டு, ‘நீ இப்போது உயர்ந்த நிலையில் இருக்கிறாய். இன்று முதல் நீ சீடர் நமச்சிவாயம் அல்ல; குரு நமச்சிவாயம்’ என்று வாழ்த்தி சிதம்பரம் செல்வதற்கு உத்தரவிட்டார்.

குருவின் உச்சிஷ்டம் மிக உயர்ந்த பிரசாதம். அதனை உண்பவர் பக்தர் என்ற நிலையிலிருந்து சீடர் என்ற நிலைக்கு உயர்கிறார். பாபா எவரையும் தம் சீடராக ஏற்றுக் கொள்வதைத் தவிர்த்து வந்த நிலையில் குசபாவ் தம் அறிவுக் கூர்மையால் பாபாவின் அருளுக்குப் பாத்திரமானார்.

‘‘பாபா என்னைத் திட்டினார். உதைத்தார். அடித்தார். ஆனால், அவருடைய உச்சிஷ்டத்தைச் சாப்பிட்ட மகிழ்ச்சியில் இருந்தேன். திடீரென்று பாபாவின் மனநிலை மாறியது. கோபம் தணிந்தார். என்னைத் தன் பக்கத்தில் கூப்பிட்டு அவரது கையை என் தலைமேல் வைத்து ஆசீர்வதித்தார். ‘‘நான் உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன்.இப்பொழுது முதல் என்னை மனத்தில் தியானித்து உள்ளங்கையை நீட்டினால் போதும். உன் கையில் துவாரகமாயி துனியிலுள்ள (அக்னி குண்டம்) சூடான உதி (விபூதி) கொட்டும். அந்த உதியை யாவருக்கும் பிரசாதமாக வழங்கு. துன்பப்படுபவர்களுக்கு கொடுத்தால் அவர்களின் துன்பம் நீங்கும். அந்த சக்தியை நான் உனக்கு இப்போதே கொடுக்கிறேன்’’ என்றார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. அவர் காலடிகளில் விழுந்து வணங்கினேன்.

நான் முன்னர் செய்த மந்திர சக்தியில் ஓர் இடத்திலிருந்து பொருள்களை எடுத்துத் தான் கொடுக்க முடியும். இனிப்புகள் மற்றைய பொருட்கள் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு அதனை என் கையில் கொண்டு வந்து கொடுப்பேன். ஆனால் இப்பொழுது நான் நினைத்த மாத்திரத்தில் பாபாவின் உதி (திருநீறு) என் கையில் கொட்டுகிறது. நான் அதைக் கொடுக்கிறேன். முதலில் பெற்ற மந்திரசக்தி திருட்டுப் பொருள்களைக் கொடுப்பது போன்றது. ஆனால் பாபாவின் உதி நோயுற்றவரை குணப்படுத்தும் சக்தி பெற்றது. அதன் மூலமாக நிறைய பேர்களுக்கு உதவி செய்ய முடிகிறது.”

பாபா மஹாசமாதியைடைந்த பின்பும் குசபாவ் இந்த சக்தியைப் பெற்றிருந்தார். வாழ்நாள் முழுவதும் அந்த சக்தியின் மூலம் பக்தர்களுக்கு உதவிவந்தார். 1936களில் குசபாவுவின் முதுமைக்காலத்தில் பி.வி. நரசிம்ம சுவாமிஜியும், பி.ஆர். அவஸ்தியும் அவரைப் பார்க்க பூனா சென்றனர். அப்பொழுது முதுமை காரணமாக படுக்கையில் படுத்திருந்த குசபாவ் கண்களை மூடிக் கொண்டு தன் கையை நீட்டினார். அவர் கைகளில் சூடான உதி இருந்தது. அதை பி.ஆர். அவஸ்தி பெற்றுக் கொண்டார். இந்த சக்தியை மற்றவர்களுக்கு பலன் கிடைக்கும் முறையில் குசபாவ் உபயோகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ருஷ்டாந்தோ நைவ த்ருஷ்ட:
த்ரிபுவன ஜடரே ஸத்குரோர் ஞானதாது:
ஸ்பர்ஷஸ் சேத் தத்ர கல்ப்ய: ஸ ந்யதி
யதஹோ ஸ்வர்ண தாம் அஸ்மஸாரம் I
ந ஸ்பர்ஷத்வம் ததாபி ஷ்ரித சரணயுகே
ஸத்குரு: ஸ்வீய சிஷ்யே
ஸ்வீயம் ஸாம்யம் விதத்தே பவதி
நிருபமஸ்தேன வா(அ)லௌகிகோபி II
என்பது ஆதிசங்கரர் அருளிய
‘சத ஸ்லோகி’யின் குருஸ்துதி.

மூன்று உலகங்களிலும் குருவுக்கு ஓர் ஒப்பு-உவமை காண இயலாது. குருவை ஸ்பர்ஷவேதி (Philosopher’s Stone) எனும் சிந்தாமணியுடன் ஒப்பிடலாம் எனில், அது தன்னால் தீண்டப்படுவதை பொன்னாக்குமேயன்றி அப்பொன்னால் தீண்டப்படும் மற்ற பொருட்கள் பொன்னாவதில்லை.ஆனால் குருநாதரின் திருவடியால் தீண்டப்பெற்ற சிஷ்யனுக்கு குருவானவர் தன்னிலையையே ப்ரஸாதித்து விடுகிறார். அந்த சிஷ்யன் குருவாகி பிறருக்கும் தன்னிலையைத் தரவல்லவன் ஆகிறான்.

ஆதலால் குருவுக்கு இவ்வுலகில் ஒப்பு உவமை இல்லை.ஒருமுறை பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவிடம் பக்தர் ஒருவர் நீங்கள் ‘ஸித்த ஸங்கல்பர்’ என்று சொன்னார். அதற்கு பாபா, ‘Siddha Sankalpa am not, Sankalpa Sidddha I am‘ என்றார். ஸித்த ஸங்கல்பம் என்பது ஸித்த புருஷர்களின் சக்தியைக் குறிக்கிறது. அது அவர்களின் யோகத்தால் அடையப்படுகின்ற சக்தி. ஆனால் ‘ஸங்கல்ப ஸித்தம்’ என்பது எனது நிலை. அது அடையப்படுவது அடையப்பட்டது அல்ல. எனது ஸங்கல்பம் எதுவோ அதுவே நிறைவேறும்.

இது சித்தர்களுக்கும் சக்தி கொடுக்கக் கூடியது என்றருளிச் செய்தார் பாபா. இதனால், எல்லாம் வல்ல சித்தேஸ்வரராக, ஸங்கல்ப சித்தராக இருந்துகொண்டு, சித்தர்களின் சக்தியாகிய ஸித்த ஸங்கல்பமாகவும் பாபா விளங்குகிறார். எனவே, பகவான் பாபாவின் அஷ்டோத்தர சத நாமாவளியில் ‘‘ஸித்தேஸ்வராய நம:, ஸித்த ஸங்கல்பாய நம:’’ என்று பாபா துதிக்கப்படுகிறார். சாயி சரணம்.

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

 

The post ‘‘ஸங்கல்ப ஸித்த சாயி’’ appeared first on Dinakaran.

Read Entire Article