மிசோரி: அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 32 பேர் பலியான நிலையில், 5,000 கட்டிடங்கள் சேதமடைந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களான கென்டகி, மிசோரி, வர்ஜீனியா பகுதியை நேற்றும், நேற்று முன்தினமும் தாக்கிய கடுமையான சூறாவளியால் கென்டகியில் 18 பேர், மிசோரியில் 7 பேர், வர்ஜீனியாவில் 2 பேர் உயிரிழந்தனர். மிசோரியின் செயின்ட் லூயிஸ் பகுதியில் சூறாவளி காற்றின் வேகம் 140 மைல்/மணி அளவில் வீசியது.
இந்த கடுமையான சூறாவளியால் 5,000 கட்டிடங்கள் சேதமடைந்தன. 38 பேர் காயமடைந்ததாக மேயர் காரா ஸ்பென்சர் தெரிவித்தார். கென்டகியின் லாரல் கவுண்டியில் 17 பேர் உயிரிழந்தனர், இதில் ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவார். சூறாவளியுடன் கூடிய கனமழையால், புழுதிப் புயலும் ஏற்பட்டு மேலும் பாதிப்பை ஏற்படுத்தின. மிசோரி மற்றும் கென்டகியில் சுமார் 1.4 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.
தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டெக்சாஸ், ஓக்லஹோமா மற்றும் அர்கான்சாஸ் பகுதிகளுக்கு மேலும் சூறாவளி எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இதனால் 50 மில்லியன் மக்கள் ஆபத்தில் உள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் அமெரிக்க செஞ்சிலுவை அமைப்பு செயின்ட் லூயிஸில் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துள்ளது. கென்டகி ஆளுநர் ஆண்டி பெஷியர், இது மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்று என்று கூறினார்.
The post கடும் சூறாவளியால் அமெரிக்காவில் 32 பேர் பலி: 5,000 கட்டிடங்கள் சேதம் appeared first on Dinakaran.