புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டுக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அஜர்பைஜான் நாட்டிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்நாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகின்றனர். தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளனர்.
இந்தியர்கள் அதிக அளவில் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். கடந்த 2024-ல் மட்டும் துருக்கிக்கு 3.3 லட்சம் இந்தியர்கள் சுற்றுலா சென்றிருந்தனர். 2023-ல் 2.74 லட்சம் இந்தியர்கள் அங்கு சுற்றுலா சென்று வந்தனர். அதேபோல் அஜர்பைஜான் நாட்டுக்கு 2024-ல் 2.43 லட்சம் இந்தியா சுற்றுலாப்பயணிகளும், 2023-ல் 1.17 லட்சம் இந்தியர்களும் சுற்றுலா சென்று வந்தனர். இதனால் அந்த நாடுகளுக்கு கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4 ஆயிரம் கோடியை இந்தியர்கள் சுற்றுலாவுக்கு செலவழித்துள்ளனர். கடந்த மாதம் 22ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அந்தப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவியை துருக்கியும், அஜர்பைஜானும் உதவின. பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் அந்த 2 நாடுகளுக்கும் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். இந்தியாவிலேயே ஏராளமான அழகிய இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு இந்தியர்கள் சென்று வரலாம் என்று பல்வேறு தரப்பிலும் குரல்கள் எழுந்தன.
இதுகுறித்து இக்ஸிகோ சுற்றுலா இணையதளம் தனது எக்ஸ் தளத்தில், ‘துருக்கி, அஜர்பைஜான், சீனா போன்ற நாடுகளுக்கு விமான டிக்கெட்கள், ஓட்டல் பதிவுகளை நாங்கள் ரத்து செய்துவிட்டோம். எப்போதுமே தேசத்துக்குத்தான் நாங்கள் முன்னுரிமை தருவோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோ ஹோம்ஸ்டேஸ் சுற்றுலா இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவுக்கு எதிரான நிலையை துருக்கி எடுத்துள்ளதால், துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நாங்கள் முடித்துக் கொண்டு விட்டோம். இனிமேல் எங்களது சுற்றுலாத் திட்டங்களில் துருக்கி இருக்காது. ஜெய்ஹிந்த்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் நின்றதால், அங்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசர்பைஜானின் தலைநகர் பாகுவில் உள்ள அசர்பைஜான் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 320 இந்திய மாணவர்கள் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பைப் பயின்று வருகின்றனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள் மற்றும் துருக்கி, அஜர்பைஜான் பொருட்கள் புறக்கணிப்பு பிரசாரங்களால் அசர்பைஜானில் உள்ள இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தன.
ஆனால், அங்குள்ள மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், உள்ளூர் மக்கள் எவ்வித விரோதப் போக்கையும் காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாகிஸ்தான் மாணவர்களுடனான நட்புறவு, நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் இருந்தபோதிலும், பல்கலைக்கழக வளாகத்தில் எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்கிறது என்றனர். இதுகுறித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவி சஞ்சுலா செலவராஜ் கூறுகையில், ‘தற்போதைய சூழலில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. உள்ளூர் மக்கள் எங்களிடம் எந்த விரோதப் போக்கையும் காட்டவில்லை. எங்களுக்கு இடையே நல்ல பிணைப்பு உள்ளது.
உண்மையில், அடுத்த வகுப்பில் பாகிஸ்தானைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்கள் இருந்தபோதிலும் எங்களுடனான நட்பு தொடர்கிறது’ என்று கூறினார். இதேபோல், கோழிக்கோட்டைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கப்பல் பொறியியல் படிப்பு மாணவர் சஜாஸ் கான் கூறுகையில், ‘வெளியில் என்ன நடந்தாலும், இங்கு நாங்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்’ என்றார். இவர் முன்பு உக்ரைன்-ரஷ்யப் போரால் உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி, பின்னர் அசர்பைஜானுக்கு படிக்க சென்றவர் ஆவார்.
மாணவர்கள் மத்தியில் இந்த நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், 106 ஆசிய மாணவர்கள் உள்ள பாகு விளையாட்டுக் குழுவின் வாட்ஸ்அப் குழுவில் பாகிஸ்தான் மாணவர்கள் கிரிக்கெட் விளையாட அழைப்பு விடுப்பதாக மங்களூரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் முகமது காலந்தர் தெரிவித்தார். இலங்கை மாணவர்களும் இந்த விளையாட்டுகளில் இணைந்துள்ளனர். கோயம்புத்தூரைச் சேர்ந்த கல்வி ஆலோசனை நிறுவனமான கெட் டைரக்ஷன் குளோபலின் உரிமையாளர் எஸ்.ராகேஷ் குமார் கூறுகையில், ‘அசர்பைஜானில் மற்ற நாடுகளைப் போலல்லாமல் தனித்துவமான கொள்கை உள்ளது. அதனால் நமது மாணவர்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை’ என்று கூறினார். இந்திய மாணவர்களில் பெரும்பாலும் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும், மேலும் சிலர் வட மாநிலத்தை சேர்ந்தனர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பாகிஸ்தான் நாட்டுக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அஜர்பைஜான் நாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு அச்சுறுத்தலா..? தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.