
ராவல்பிண்டி,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற்று வரும் 6வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வங்காளதேசத்தின் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன் மற்றும் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் தன்சித் ஹசன் 24 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் கண்ட மெஹிதி ஹசன் மிராஸ் 13 ரன், தவ்ஹித் ஹ்ரிடோய் 7 ரன், முஷ்பிகுர் ரஹீம் 2 ரன், மஹ்மதுல்லா 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷாண்டோ அரைசதம் அடித்த நிலையில் 77 ரன்களில் அவுட் ஆனார்.
தொடர்ந்து ஜாக்கர் அலி மற்றும் ரிஷாத் ஹொசைன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ரிஷாத் ஹொசைன் 26 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய ஜாக்கர் அலி 45 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாண்டோ 77 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆட உள்ளது.