ஈஷாவில் 'யக்ஷா' 2-ஆம் நாள் விழா!

3 hours ago 1

கோவை,

இந்தியாவில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் யக்ஷா கலைத் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழாவின் முதல் நாள் விழா சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் விழாவாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய விருதுபெற்ற இசைக்கலைஞர் ராகுல் தேஷ்பாண்டே வழங்கிய இந்துஸ்தானி இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் தாயார் லட்சுமி ரவீந்தர் மற்றும் ஈவண்ட் ஆர்ட் நிறுவனத்தை சேர்ந்த சரஸ்வதி கிருஷ்ணகுமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.

ஈஷா மைய வளாகத்தின் சூர்ய குண்ட மண்டபம் முன் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தேசிய விருது வென்ற பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் ராகுல் தேஷ்பாண்டேவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவருடன் நிகில் ரத்னாகர் பதக், ஆஷிஷ் தத் செளபே, பூர்ணிமா திலிப் செக்டே உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று அசத்தினர்.

இந்த இசை நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பொதுமக்களும் ஈஷா தன்னார்வலர்களும் கண்டு ரசித்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் யக்ஷா திருவிழாவில் நிறைவு நாளான நாளை (பிப் 25) மீனாட்சி ஸ்ரீனிவாசனின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நம் தேசத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பாரத கலாச்சாரத்தில் தோன்றிய பல விதமான கலைவடிவங்கள் இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து மறைந்து போய் வருகின்றன. இந்த கலை வடிவங்களின் தனித்தன்மை, புனிதம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாத்து வளர்ப்பதற்கான ஒரு முயற்சியாக ஈஷா ஒவ்வொரு வருடமும் யக்க்ஷா கலைத் திருவிழாவை நடத்துகிறது. கலை, இசை மற்றும் நடனத்திற்கான மூன்று நாள் திருவிழாவாக யக்ஷா நடைபெறுகிறது. இதில் தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் கலந்துக்கொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.

Read Entire Article