
சென்னை,
'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் பிளாக் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் 'அகத்தியா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படம் ஜனவரி 31ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பின்னர் படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது.
இப்படத்தின் முதல் பாடலான 'காற்றின் விரல்' பாடல் வெளியாகி வைரலானது. இப்பாடலுக்கான வரிகளை பா. விஜய் எழுத, யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.
இந்நிலையில், பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'அகத்தியா' படத்தில், இசைஞானி இளையராஜாவின் பாடலான 'என் இனிய பொன் நிலாவே' பாடலை ரீ-கிரியேட் செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன். இப்பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
‛என் இனிய பொன் நிலாவே' பாடல் காப்புரிமை சரிகம நிறுவனத்திடம் உள்ளதால், ரீமேக் செய்யப்பட்ட பாடலை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து 'அகத்தியா' படக்குழு சரிகம நிறுவனத்திடம் ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் உரிமையை பெற்றுள்ளது.