வேளச்சேரி-தாம்பரம் நெடுஞ்சாலையை கடக்க ரூ.14 கோடியில் நடைமேம்பால பணிகள் மார்ச்சில் தொடக்கம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

2 weeks ago 1

சென்னை: வேளச்சேரி-தாம்பரம் நெடுஞ்சாலையை கடக்க ரூ.14 கோடியில் நடைமேம்பாலம் கட்டும் பணிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை வேளச்சேரியை பொறுத்தவரையில் ஒருபுறம் 100 அடி சாலை, மறுபுறம் வேளச்சேரி – தாம்பரம் நெடுஞ்சாலை, வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் தொடங்கி வாகன நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும், வேளச்சேரி பகுதிகளில் பெருகி வரும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றால் அலுவலக நேரங்களில் மேம்பாலத்தில் கீழ் இன்றும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதேபோல், வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருபவர்கள் சாலையை கடப்பதற்காக பிரதான சாலை வழியாக நடந்து சென்று சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளை தாண்டி மறுபுறம் செல்ல வேண்டும். இல்லையெனில், ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள யூ டர்ன் எடுத்து மேம்பாலத்தை சுற்றி வரவேண்டும். இதற்கு கிட்டத்தட்ட 800 மீட்டர் தூரம் கடந்து வரவேண்டியுள்ளது. மேலும், சாலைகளின் நடுவே தடுப்பு சுவர்களை தாண்டி செல்லும்போது அவ்வப்போது சாலை விபத்துகளும் ஏற்படுகிறது.

எனவே, இப்பகுதிகளில் சாலையை கடக்க நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை கருத்தில் கொண்டு வேளச்சேரி ரயில்‌ நிலைய பேருந்து நிறுத்தம்‌, சென்னை உள்வட்ட சாலையில்‌, கோயம்பேடு சந்திப்பு அருகே என 2 இடங்களில்‌ நகரும்‌ படிக்கட்டுகளுடன்‌ கூடிய நடைமேம்பாலம்‌ அமைக்கப்படும் என கடந்தாண்டு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார். அதன்படி, பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக வேளச்சேரி-தாம்பரம் சாலையில் ரூ.14 கோடியில் நடைமேம்பாலம் கட்டப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வேளச்சேரி விஜயநகர் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது. சாலைகளை கடப்பதற்காக நடைமேம்பாலம் அமைக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேம்பாலம் நல்லி சில்க்ஸ் அருகே ரூ.14 கோடியில் கட்டப்பட உள்ளது. பாதசாரிகளின் மேம்பாலம் கட்டுவதற்கு என தனியாக நிலம் தேவையில்லை. எனவே, நிலம் கையகப்படுத்தப்போவதும் இல்லை. இந்த பணிகள் மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளது. குறிப்பாக, இந்த நடைமேம்பாலமானது எஸ்கடேட்டர்கள், லிப்ட் மற்றும் சாய்வான படிக்கட்டுகள் உள்ளிட்ட நவீன காலத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே மேம்பாலம் கட்டப்பட உள்ளதால் வாகனங்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கட்டுமான பணிகள் தொடங்கியதிலிருந்து 14 மாதங்களில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வேளச்சேரி-தாம்பரம் நெடுஞ்சாலையை கடக்க ரூ.14 கோடியில் நடைமேம்பால பணிகள் மார்ச்சில் தொடக்கம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article