புதுச்சேரி, பிப். 10: புதுச்சேரிக்கு நேற்று வந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரியை சேர்ந்த தவில் கலைஞர் தட்சணாமூர்த்தி இசை பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளதை தொடர்ந்து அவரை கவுரவித்தார். பின்னர் நிருபர்களிடம் ஒன்றிய அமைச்சர் முருகன் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.3432 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதோடு, ஜிப்மருக்கு தனியாக ரூ.1450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.150 கோடியானது உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
விவசாயிகள் கிசான் கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கியிருக்கிறோம். இதில் 16 ஆயிரம் விவசாயிகள் புதுச்சேரியில் பயன்பெறுகிறார்கள். ஜல்சக்தி திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ.186 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் ரூ.12 லட்சம் வரை வரிகட்ட வேண்டியதில்லை. தமிழகத்தில் கடந்த 2014க்கு முன்பாக ரயில்வேக்கு ரூ.800 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறோம்.
புது ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்குகிறோம். தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்து ஒத்துழைப்பு தர வேண்டும், என்றார். புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட 1.46 சதவீதம் அளவே அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர புதிய திட்டங்கள் ஏதும் இல்லையே என்று கேட்டபோது, பல திட்டங்கள் இணைந்து புதுச்சேரிக்கு தரப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசுக்கும், ஜிப்மருக்கும் நிதி ஒதுக்கீடு தந்துள்ளோம். இதன்பிறகு துறைகள் வாரியாக திட்டங்கள் தருவார்கள். மத்திய அரசு 90 சதவீத மானியம் புதுச்சேரிக்கு தருகிறது.
வேண்டியதை புதுச்சேரிக்கு தர தயாராக இருக்கிறார்கள், என்றார். புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்கவில்லையே?, நிதி நெருக்கடியில் உள்ளதே என்று கேட்டதற்கு, புதுச்சேரிக்கு நிதி நெருக்கடி இல்லை. அனைத்து உதவியும் பிரதமர், உள்துறை அமைச்சர் முழுமையாக செய்கிறார்கள். பாரபட்சமின்றி நிதி தருகிறோம். புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்ப்பது பற்றி நிதி அமைச்சரிடம் தெரிவிக்கிறோம்.
அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்கும் வகையில் நிதி ஒதுக்கியுள்ளோம். மக்களுக்கு உபயோகமான பட்ஜெட் இது, என்றார். புதுச்சேரி பிரச்னைகள் தொடர்பான கேள்விகளை நிருபர்கள் தொடர்ந்து எழுப்பியவுடன், பட்ஜெட் நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள். புதுச்சேரிக்கு திட்டம், நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். தேவைகள் இருந்தால் ஆளுநர், முதல்வர் தரும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம், என்றார்.
The post அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்கும் வகையில் நிதி ஒதுக்கியுள்ளோம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.