மரக்காணம், பிப். 10: மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் துவங்கி நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இதில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் இங்கிருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுவை, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் உப்பு உற்பத்திக்கான பாத்தி அமைத்தல், கால்வாய்கள் சீரமைத்தல், சேர் மிதித்தல் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் துவங்கப்படும். இதை தொடர்ந்து ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் உப்பு உற்பத்தி துவங்கப்படும். இதில் இருந்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வரையில் உப்புத்தொழில் நடைபெறும். இந்நிலையில், கடந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பருவமழை காலம் கடந்தும் மிக அதிக அளவிலும் பெய்தது. இதனால் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கின.
தேங்கி நின்ற மழை நீரானது தற்போது தான் முழுவதுமாக வடிய துவங்கியது. இதனால் இப்பகுதியில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்து உப்பு உற்பத்தி செய்ய குறைந்தது 20 நாட்களுக்கு மேலாகும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர். எதிர்பாராதவிதமாக கோடை மழை பெய்தால், உப்பு உற்பத்தி தடைபடும் நிலை உள்ளது. இப்பகுதியில் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை. இதனால் உப்பு தொழிலையே நம்பி இருக்கும் நிலை உள்ளது.
இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கோடை மழை மற்றும் பருவம் தவறி பெய்யும் மழையின் காரணமாக உப்பு தொழில் ஆண்டுக்கு 6 மாதம் மட்டுமே நடைபெறும் நிலை உள்ளது. மற்ற மாதங்களில் தொழிலாளர்கள் வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்களின் நலன் கருதி மழைக்கால நிவாரண நிதியாக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு சார்பில் உப்பள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த நிவாரண தொகையானது முறையாக உப்பளத்தில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை, என கூறப்படுகிறது. ஆனால் உப்பு தொழிலே என்னவென்று தெரியாத நபர்கள் கூட வாரியத்தில் பதிவுசெய்து, நிவாரண நிதியை வாங்கி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, தினந்தோறும் உப்பளத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு இந்த நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மரக்காணத்தில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் துவங்கியது appeared first on Dinakaran.