
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். பி.காம் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலம் ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் உங்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை உள்ளதாகவும், அதற்காக நடைமுறை செலவுகளுக்காக பணம் அனுப்ப வேண்டும் என்று கூறினார்.
இதை நம்பிய அந்த வாலிபர், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.9 லட்சத்து 23 ஆயிரத்து 600 அனுப்பி வைத்தார். ஆனால் சொன்னபடி எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் முகநூலில் தன்னிடம் பேசிய நபரை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர், இந்த மோசடி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வேலை வாங்கி தருவதாக கூறி முகநூலில் பழகி பட்டதாரி வாலிபரிடம் ரூ.9.23 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.