தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - சீமான்

3 days ago 4

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (01.07.2025) நிகழ்ந்த வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த மகாலிங்கம், செல்லப்பாண்டியன், லட்சுமி, ராமமூர்த்தி, ராமஜெயம், வைரமணி ஆகிய 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு, ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் ஏற்படும் வெடிவிபத்தில் மனித உயிர்கள் மலிவாக உயிரிழப்பது வாடிக்கையான ஒரு செய்தியாக மாறிவிட்டது. இதில் விபத்து எனும் போர்வைக்குள் அரசும், அதிகாரிகளும் ஒளிந்து கொள்கிறார்கள். விதிமீறலும், பாதுகாப்பின்மையும்தான் பெரும்பாலும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகள் இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாகத் தொடர்வதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். கடந்த 25 ஆண்டுகளில் பட்டாசு ஆலைகளிலும் கடைகளிலும் கிடங்குகளிலும் ஏற்பட்ட வெடி விபத்துகளில் ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பல நூற்றுக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்த பெருந்துயரம் இன்றுவரை நீண்டு கொண்டே வருகிறது.

பட்டாசு ஆலை விபத்துகளில் தந்தையையும், தாயையும் இழந்து தவிக்கும் குடும்பங்கள் எத்தனை? அதனால் கல்வியை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் பிள்ளைகள் எத்தனை பேர்? பெற்ற பிள்ளைகளை பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்? இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் இக்கொடுமைகளை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கப்போகிறது? உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், அடிப்படை விதிகளும் காற்றில் பறக்க விடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும்தான் பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் இவ்விதக் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது.

மனித உயிர்களை பலி வாங்கும் இத்தகைய கொடும் வெடி விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க தமிழ்நாடு அரசானது பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி கொடுத்து அவர்களின் மறுவாழ்விற்கு உதவிடுவதே நிலைத்த தீர்வாக அமையும் என்று அறிவுறுத்துகிறேன். மேலும், தற்போது விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடனடியாக நீதி விசாரணை செய்வதோடு, தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளின் பாதுகாப்பை சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள 4 லட்ச ரூபாய் போதுமானதன்று. கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்கும் தி.மு.க. அரசு, கடின உடல் உழைப்பு புரிந்து வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வெறும் 4 லட்ச ரூபாய் அறிவித்துள்ளது போதுமானதன்று. ஆகவே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் துயர் துடைப்பு நிதியாக உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article