
சிம்லா,
இமாசலபிரதேசத்தில் நேற்று முன்தினம் 11 மேக வெடிப்பு சம்பவங்கள், 4 இடங்களில் திடீர் வெள்ளம் மற்றும் ஒரு பெரிய நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன. அவற்றில் பெரும்பாலானவை மண்டி மாவட்டத்தில் நடந்தன.
மண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். 34 பேர் மாயமானார்கள். கடந்த 32 மணி நேரத்தில் மட்டும் மண்டியில் இருந்து 316 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ஹமீர்பூரில் 51 பேரும், சம்பாவில் 3 பேரும் மீட்கப்பட்டனர்.
மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 406 சாலைகள் மூடப்பட்டுள்ளன, அவற்றில் 248 சாலைகள் மண்டியை சேர்ந்தவை. மண்டியில் மின்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹமீர்பூரில், பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பல்லா கிராமத்தில் இருந்து 30 தொழிலாளர்கள் உள்ட 51 பேர் மீட்கப்பட்டனர்.
கடந்த மாதம் 20-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இமாசலபிரதேசம் ₹500 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக அந்த மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.