பெரும்புதூர், அக். 10 : ங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்கள் 500 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதமாக கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலைமையில் 7 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முதல்வர் அறிவுரையின்படி, இரு தினங்களுக்கு முன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதாகவும், இதில் அக்டோபர் மாதம் முதல், மார்ச் 2025 வரை ₹5 ஆயிரம் ஊக்க தொகை மற்றும் பணியின்போது உயிரிழந்த தொழிலாளார் குடும்பத்திற்கு நிர்வாகம் சார்பில் ₹1 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட 14 கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், சிஐடியு சங்கத்தை அனுமதிப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக நிர்வாகம் சார்பில் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் சிஐடியூ சங்கத்துக்கு ஆதரவாக தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த பந்தலை போலீசார் திடீரென அகற்றியதாக கூறப்படுகிறது. ஆனாலும், போராட்டக்காரர்கள் தொழிற்சாலை அருகில் தனியார் இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிஐடியூ சங்க மாநில தலைவர் சௌந்தர்ராஜன், மாவட்ட தலைவர் முத்துகுமார் உள்பட 500 பேரை கைது செய்து தனியார் பேருந்துகள் மூலம் சுங்குவார்சத்திரம், வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் அடைத்தனர்.இதற்கிடையே போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 2 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். மயங்கி கீழே விழுந்த 2 பேரையும் சக தொழிலாளர்கள் மீட்டு பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 500 பேர் கைது: சுங்குவார்சத்திரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.