வேலூர் அருகே பயங்கரம்: மின்சாரம் பாய்ச்சி திமுக நிர்வாகியின் மகன் கொலை?

1 month ago 7

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே மின்சாரம் பாய்ச்சி வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி ஊராட்சி பண்டலதொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் திமுக மேற்கு ஒன்றிய அவைத்தலைவராகவும், ஒப்பந்ததாராகவும் உள்ளார். இவருக்கு 3 மகன்கள். இவர்களில் 3வது மகன் பிரசாந்த் (20). இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக தங்கள் விவசாய நிலத்தில் விவசாய வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரசாந்த், வழக்கம்போல் தங்கள் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை காணாமல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிவந்தனர். இருப்பினும் தகவல் இல்லை.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பிரசாந்த்தை தேடி வந்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று காலை அதே கிராமத்தில் உள்ள ஒருவருக்கு சொந்தமான கிணற்றையொட்டிய பம்புஷெட் அருகே கால்களில் மின்வயர் சுற்றிய நிலையில் பிரசாந்த் சடலமாக கிடந்தார். இதனை அவ்வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பிரசாந்த்தின் குடும்பத்தாருக்கு தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மீட்க முயன்றபோது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், சடலத்தை எடுக்கவிடாமல் தடுத்தனர். பிரசாந்த்தை யாரோ மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளனர். கொலையாளிகளை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலெக்டர் இங்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வேலூர் அருகே பயங்கரம்: மின்சாரம் பாய்ச்சி திமுக நிர்வாகியின் மகன் கொலை? appeared first on Dinakaran.

Read Entire Article