'வேலு நாச்சியார்' படத்தின் மோஷன் டீசர் வெளியானது

6 months ago 13

சென்னை,

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக 'வேலு நாச்சியார்' திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியார் வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. 'வேலு நாச்சியார்' திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெ எம் பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

'வேலு நாச்சியார்' திரைப்படத்தின் மோஷன் பிக்சர் டீசர் வேலுநாச்சியாரின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று அடுத்த வருடம் வேலு நாச்சியாரின் பிறந்தநாளுக்கு திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மோஷன் பிக்சர் டீசர் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான ஜெ எம் பஷீர், "வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி. வேலுநாச்சியாரின் பிறந்தநாள் அன்று இந்த டீசரை வெளியிட்டு இருப்பது இரட்டிப்பு சந்தோஷம்," என்றார்.

நமது நாட்டுக்காகவும், தேச விடுதலைக்காகவும் தன்னலம் இன்றி போராடிய மாபெரும் ஆளுமைகள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் அறிவது அவசியம் என்றும் இதன் காரணமாகவே 'தேசிய தலைவர்' மற்றும் 'வேலு நாச்சியார்' உள்ளிட்ட திரைப்படங்களை தான் தயாரித்து வருவதாகவும் பஷீர் மேலும் தெரிவித்தார். வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

'வேலு நாச்சியார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article