
சியோல்,
தென்கொரிய அதிபராக செயல்பட்டு வந்தவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர நிலை உத்தரவை அதிபர் திரும்பப்பெற்றார்.
இதையடுத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டில் அவரச நிலையை பிரகடனப்படுத்தி கிளர்ச்சிக்கு நிகரான குற்ற செயலில் ஈடுபட்டதாக கடந்த மார்ச் மாதம் யூன் சுக் இயோல் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அதிபர் சுக் இயோலை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தன. வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டார். புதிய அதிபராக லீ ஜே-மியுங் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்சிகளை அழிக்க முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் முயற்சிப்பதாக அரசு தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்ய அரசுக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, யூன் சுக் இயோல் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.