வேறொருவருடன் நிச்சயதார்த்தம்.. மணப்பெண் வீட்டின் முன் தூக்கில் தொங்கிய காதலன்: காதலி எடுத்த விபரீத முடிவு

4 hours ago 1

குழித்துறை,

கேரள மாநிலம் கொல்லம் பாருபள்ளி கோட்டக்காரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயின் மகன் ஜீதின் (வயது 25). இவர் அங்குள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் அவரது தாத்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு உடன் இருந்தபடி தாத்தாவை ஜீதின் கவனித்தார்.

அப்போது அந்த மருத்துவமனையில் பயிற்சி பெற்ற 3-ம் ஆண்டு நர்சிங் மாணவிக்கும், ஜீதினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த மாணவியின் சொந்த ஊர் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள புத்தன்சந்தை பகுதியாகும். பின்னர் ஜீதினும், நர்சிங் மாணவியும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். இருவரும் மனம்விட்டு பேச ஒரு கட்டத்தில் அவர்களுக்கிடையே இருந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக நேசித்தனர்.

இதனைத்தொடர்ந்து காதலியின் வீட்டுக்கு சென்று அவர் பெண் கேட்டுள்ளார். ஆனால் காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலியை கரம் பிடிக்க முடியாத வேதனையில் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

இந்தநிலையில் நர்சிங் மாணவியின் பெற்றோர் அவருக்கு அவசர, அவசரமாக மாப்பிள்ளை பார்க்க தொடங்கி நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்தனர். இந்த தகவலை அறிந்த ஜீதின் துடிதுடித்து போனார். இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு கேரளாவில் இருந்து காதலியை தேடி புத்தன்சந்தை பகுதிக்கு விரைந்தார். ஆனால் அங்கு காதலியையோ, காதலியின் குடும்பத்தினரையோ பார்க்க முடியவில்லை.

இதனால் இனி சாவதே மேல் என முடிவெடுத்த அவர் அடுத்த நொடியிலேயே காதலியின் வீட்டு முன் உயிரை மாய்த்துக் கொண்டார். அதாவது அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்.

இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ஜீதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே காதலன் ஜீதின் தற்கொலை செய்ததை கேள்விபட்டதும் நர்சிங் மாணவியும் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் கிருமிநாசினியை குடித்ததாக தெரிகிறது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஜீதின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article