
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 64-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். நடப்பு தொடர் முழுவதும் கலக்கிய இந்த ஜோடி இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவர்களில் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. மார்க்ரம் 36 பந்துகளில் ஆட்டமிழந்தார். இதனிடையே மார்ஷ் அரைசதம் விளாசினார்.
பின்னர் மார்ஷ் உடன் கை கோர்த்த நிக்கோலஸ் பூரனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த லக்னோ அணியின் ரன் வேகம் சீரான வேகத்தில் உயர்ந்தது. இவர்களின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் குஜராத் பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் 56 பந்துகளில் ஐ.பி.எல். தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் பூரன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சதத்தை கடந்த பிறகும் சிறப்பாக பேட்டிங் செய்த மார்ஷ் 117 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பண்ட் களமிறங்கினார். அவரும் தனது பங்குக்கு 6 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 235 ரன்கள் குவித்துள்ளது. நிக்கோலஸ் பூரன் 56 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனையடுத்து 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் களமிறங்க உள்ளது.