வேதாரண்யம், அக்.24: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா ஆதனூர் ஊராட்சி கோவில்தாவு பள்ளியில் குரங்குகள் மாணவர்களை பயமுறுத்துவதாக அரசு தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் தனலெட்சுமி கோடியக்கரை வனச்சரக அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் நாகை வன உயிரின காப்பாளார் அபிஷேக் டேமார் ஆலோசனையின்பேரில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் வனவர் இளங்செழியன் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர். மேலும் குரங்குகள் இனி வரும் காலங்களில் இவ்வாறு வராமல் இருப்பதற்கான முன் தடுப்பு மற்றும் எச்சரிக்கை செயல்பாடுகள் குறித்துவனச்சரக அலுவலர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்பு குரங்குகள் குறித்தும் அவைகளோடு மேற்கொள்ள வேண்டிய தவிர்க்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் நேரில் விளக்கப்பட்டது. மாணவர்கள் உணவினை பள்ளிக்கு வெளியில் வைத்து உண்பதாலும் மற்றும் மீதி உணவினை பள்ளியின் வாயில் பகுதியிலேயே கொட்டுவதால் வரத் தொடங்கிய குரங்குகள் தொடர்ந்து அங்கேயே நிரந்தர உணவு கிடைக்கும் எண்ணம் உருவாகி அங்கேயே தங்கும் சூழல் உருவானதை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு தயார் செய்பவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளி மாணவர்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்ததால் மாணவர்கள் தற்போது நிம்மதியடைந்ததுடன், வனத்துறையினருக்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.
The post வேதாரண்யம் அருகே பள்ளியில் நடமாடிய குரங்கு கூண்டுக்குள் சிக்கியது appeared first on Dinakaran.