டெல்லி: டெல்லியில் தாமரை மலராத பகுதியே இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை கைப்பற்றியது. இதனால், அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ., தலைமையகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொண்டர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி; ஆம் ஆத்மியிடம் இருந்து டெல்லி விடுவிக்கப்பட்டுள்ளது. டெல்லி தங்களுடையது என ஆணவத்துடனும், அதிகாரத்துடனும் நடந்து கொண்டவர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளனர். தாங்கள்தான் டெல்லியின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் டெல்லியை சூழ்ந்த ஆடம்பரம், அராஜகம், ஆணவம் தோற்கடிக்கப்பட்டன. டெல்லியில் வென்றது சாதனை வெற்றி அல்ல; வரலாற்று சிறப்பு மிக்கது.
டெல்லியில் தாமரை மலராத பகுதியே இல்லை, எல்லா மொழி பேசும் மக்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். பாஜகவின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி; வரலாற்று வெற்றியை அளித்த டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன். டெல்லி என்பது வெறும் நகரம் மட்டும் அல்ல; அது ஒரு மினி இந்தியா. டெல்லியின் தொலைநோக்கு பார்வை, நம்பிக்கை வென்றுள்ளது. இரட்டை இன்ஜின் அரசால், டெல்லி இனி இரட்டை வேகத்தில் வளர்ச்சிப் பெறும்.
டெல்லிவாசிகளான நீங்கள் அனைவரும் இன்று டெல்லியின் வளர்ச்சியில் இருந்த ஒரு பெரிய தடையை நீக்கிவிட்டீர்கள். இந்தத் தேர்தலின்போது நான் எங்கு சென்றாலும், நான் பூர்வாஞ்சலின் எம்.பி. என்று பெருமையுடன் சொன்னேன். பூர்வாஞ்சல் மக்கள் அன்பையும், நம்பிக்கையையும், புதிய ஆற்றலையும் புதிய பலத்தையும் அளித்துள்ளனர். எனவே, பூர்வாஞ்சலின் எம்.பி.யாக, பூர்வாஞ்சல் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று கூறினார்.
The post டெல்லியில் தாமரை மலராத பகுதியே இல்லை.. ஆடம்பரம், அராஜகம், ஆணவம் தோற்கடிக்கப்பட்டன: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.