சென்னை: “எங்களது நன்றியின் அடையாளமாக எப்போதும் மக்களுக்கு உண்மையாக இருப்போம். ஈரோடு கிழக்கு தொகுதியை மட்டுமல்ல, மேற்கு மண்டலம் முழுவதையும் வளப்படுத்த, மேம்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவோம். மேற்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று உறுதி அளிக்கிறேன்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.