புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் 397 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. இதில் வேங்கை வயல் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக, முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முத்தையா, வேங்கை வயல் போலீஸ்காரர் முரளிராஜின் தந்தை ஜீவானந்தத்தை அவமானப்படுத்தியதாகவும், இதற்கு பழி வாங்கும் வகையில் போலீஸ்காரர் முரளிராஜாவால் சதிதிட்டம் தீட்டப்பட்டு, அவருடன் இணைந்து சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் இச்செயலை செய்ததாக சிபிசிஐடி போலீசாரால், புதுக்கோட்டை சிறப்பு நிதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
முதல் குற்றவாளி என சேர்க்கப்பட்டுள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் முரளி ராஜா, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து தலைமறைவானதால், பணிக்கு வரவில்லை. எனவே புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் எஸ்பி அபிஷேக் குப்தா, போலீஸ்காரர் முரளி ராஜாவை விட்டோடி (தலைமறைவு) என்று அறிவித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீஸ்காரர் முரளி ராஜாவை, விட்டோடி என அறிவித்து, அவரின் வீட்டு வாசலில் அதற்கான அறிவிப்பு ஆணையை போலீசார் ஒட்டினர்.
The post வேங்கைவயல் விவகாரம் தலைமறைவு குற்றவாளியாக போலீஸ்காரர் அறிவிப்பு: வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய காவல்துறை appeared first on Dinakaran.