வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 230 ரன்களில் ஆல் அவுட்

3 hours ago 3

முல்தான்,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. காலையில் நிலவிய கடுமையான பனிமூட்டத்தால் ஆட்டம் தொடங்குவதில் 2 மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஆனது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாளில் 41.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சாத் ஷகீல் 56 ரன்களுடனும், ரிஸ்வான் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 2-வது நாள் இன்று நடைபெற்று வருகிறது. பனிமூட்டத்தால் இன்றும் ஆட்டம் தொடங்க காலதாமதம் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் தரப்பில் சாத் ஷகீல் 84 ரன்களிலும், ரிஸ்வான் 71 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 230 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேடன் சீல்ஸ் மற்றும் ஜோமெல் வாரிக்கன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.

Read Entire Article