முல்தான்,
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பனிமூட்டம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் சிறிது கால தாமதம் ஆனது.
அதன்பின் சிறிது நேரத்திற்கு பின் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாளில் 41.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சாத் ஷகீல் 56 ரன்களுடனும், ரிஸ்வான் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் இன்று நடைபெற்று வருகிறது. பனிமூட்டத்தால் இன்றும் ஆட்டம் தொடங்க காலதாமதம் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 230 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாத் ஷகீல் 84 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், வாரிகன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 25.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 137 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக வாரிகன் 31 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 5 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் 93 ரன் முன்னிலையுடன் பாகிஸ்தான் தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.