வாஷிங்டன்: உலகின் சர்ச்சை நாயகனாக வலம் வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். அப்போது டிரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்சும் ஜெலன்ஸ்கியிடம் கடுமையாக நடந்து கொண்டனர். உலக மீடியாக்கள் முன்பாகவே ஜெலன்ஸ்கியை மிரட்டும் தொனியில் டிரம்ப் பேசினார். இறுதியில் அவரை வெளியேறுமாறு கூறி அவமதித்து அனுப்பி வைத்தார். இந்த நிலையில், இதே போன்ற அவமதிப்பை தற்போது தென்னாப்பிரிக்கா அதிபர் ரமபோசாவும் சந்தித்துள்ளார். அமெரிக்கா சென்ற அதிபர் ரமபோசா நேற்று முன்தினம் இரவு அதிபர் டிரம்ப்புடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பல சர்வதேச மீடியாக்கள் முன்பாக பேச்சுவார்த்தையை தொடங்கிய டிரம்ப், ‘‘ரமபோசா பலப்பல வட்டாரங்களில் மதிக்கப்படும் மனிதர், சில வட்டாரங்களில் கொஞ்சம் சர்ச்சைக்குரியவராகவும் கருதப்படுகிறார்’’ என ஆரம்பத்திலேயே காலை வாரினார்.
அதற்கு ரமபோசா, ‘‘நாம் அனைவரும் அப்படித்தான்’’ என நிதானமாக பதிலளித்தார். தொட ர்ந்து பேசிய டிரம்ப், தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின விவசாயிகள் இனப்படுகொலை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். ‘
‘வெள்ளையர்கள் தங்கள் பாதுகாப்புக்காக தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களின் நிலம் பறிக்கப்படுகிறது. பல இடங்களில் அவர்கள் கொல்லப்படுகிறார்கள்’’ என்றார். இதை மறுத்த அதிபர் ரமபோசா ‘‘வெள்ளையர்கள் இனத்திற்காக குறிவைக்கப்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை’’ என்றார். உடனே டிரம்ப், அனைத்து விளக்குகளையும் அணைக்கச் சொல்லி அங்கிருந்த டிவியில் வீடியோ ஒன்றை ஒளிபரப்பச் செய்தார். அதில், ‘விவசாயியை கொல்’ என்ற வரிகள் அடங்கிய பாடலை அரசியல் தலைவர் ஒருவர் பாடுவது காட்டப்பட்டது. அந்த அரசியல் தலைவர் தென்னாப்பிரிக்க ஆளும் கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாதவர் என விளக்கம் அளித்த அதிபர் ரமபோசா, ‘‘இது அரசின் கொள்கை அல்ல. எந்த விவசாயியையும் கொல்வதற்கு நாங்கள் எதிரானவர்கள்’’ என்றார்.
அதற்கும் அசராத டிரம்ப், ‘மற்றொரு வீடியோவை காட்டி, கொல்லப்பட்ட வெள்ளையின விவசாயிகளின் கல்லறைகள் சாலை ஓரத்தில் இருப்பதாக சுட்டிக் காட்டினார். அதற்கு ரமபோசா, ‘‘இது எங்கே என்று எனக்குத் தெரிய வேண்டும். ஏனென்றால் இதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை’’ என்றார். அதற்கு டிரம்ப் குறிப்பிட்டு எந்த இடத்தையும் கூறாமல், ‘‘தென்னாப்பிரிக்காவில் உள்ளது’’ என்றார். சர்வதேச ஊடகங்கள் முன்பாக டிரம்ப் இவ்வாறு ஆதாரமின்றி ஒருநாட்டின் அதிபருக்கு எதிராக நேருக்கு நேர் குற்றம்சாட்டிய விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிராக இனவெறி தாக்குதல் நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டும் டிரம்ப், தென்னாப்பிரிக்காவிற்கான அனைத்து அமெரிக்க உதவிகளையும் ஏற்கனவே நிறுத்திவிட்டார். இஸ்ரேல் உள்ளிட்ட எந்த விவகாரத்திலும் அமெரிக்காவுக்கு ஆதரவாக தென்னாப்பிரிக்கா இல்லாததால் அந்நாட்டின் மீது டிரம்ப் கோபத்தில் உள்ளார். டிரம்ப்-ரமபோசா சந்திப்பு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
The post ‘வெள்ளையினத்தவர்கள் இனப்படுகொலை’ தென்னாப்பிரிக்கா அதிபர் மீது டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டு: வெள்ளை மாளிகையில் பரபரப்பாக நடந்த சந்திப்பு; உக்ரைன் அதிபரை போல அவமதித்து அனுப்பினாரா? appeared first on Dinakaran.