
வாஷிங்டன்,
உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் அரசு இந்த போரை எதிர்கொண்டு வருகிறது.
அதே சமயம், அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்து வருகிறார். முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி போல் செயல்படுவதாக டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.
உக்ரைனில் 2019-ல் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்த ஆண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உக்ரைன் சட்டங்களின்படி, நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை என்பதால் ஜெலன்ஸ்கி அதிபராக தொடர்கிறார்.
இதனை குறிப்பிடும் வகையில், "முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுடன் சேர்ந்து போர் நீடித்திருக்க ஜெலன்ஸ்கி நாடகம் ஆடி உள்ளார். உக்ரைன் அதிபர் தேர்தலை நடத்த விடாமல் ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். உக்ரைனில் தேர்தல் நடத்தாவிடில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு ஒருநாள் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் குறித்து அவர் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவதாகவும், ஜெலன்ஸ்கியின் துணிச்சலை பாராட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ரஷியாவுடனான போரின்போது உக்ரைனுக்கு அளித்த உதவிகளுக்கு பதிலாக அந்த நாட்டின் அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமத்தை தங்களுக்கு கால வரையில்லாமல் வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பின்போது கனிமவள ஒப்பந்தம் குறித்து டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷிய அதிபர் புதினை குறிப்பிடும் வகையில், "அமைதி பேச்சுவார்த்தைகளின்போது ஒரு கொலையாளியுடன் எந்த சமரசமும் இருக்கக்கூடாது" என்று டிரம்ப்பிடம் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்,
இதற்கு பதிலளித்த டிரம்ப், "ரஷ்யாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உக்ரைன் சமரசம் செய்ய வேண்டியிருக்கும்" என்று உறுதியாக தெரிவித்தார். மேலும் ரஷ்யா-உக்ரைன் இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உக்ரைனின் இயற்கை வளங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் ஒப்பந்தம் மிகவும் நியாயமானது என்றும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.