சென்னை: சென்னையில் ஐடி ஊழியர்களை குறிவைத்து கொக்கைன் என்ற போதைப் பொருளை விற்று வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.93 கிராம் கொக்கைன் மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி ‘போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி, போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
அதேபோல், புதிதாக உருவாக்கப்பட்ட போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரும் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சூளைமேடு பகுதியில் கொக்கைன் என்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பதாக சூளைமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் கடந்த 2 நாட்களாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது 2 பேர், வாட்ஸ்அப் குழு மூலம் கொக்கைன் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே, அந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ராயப்பேட்டையை சேர்ந்த பயாஸ் அஹ்மத் (31) மற்றும் கோயம்பேடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (35) என்பதும், இவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொக்கைன் கடத்தி வந்து, சென்னையில் உள்ள ஐடி ஊழியர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.93 கிராம் மதிப்புள்ள கொக்கைன், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து வாடிக்கையாளர்களை பிடிக்க பயன்படுத்திய 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து, கொக்கைன் போதைப் பொருள் வாங்கியவர்கள் மற்றும் விற்ற நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
The post வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஐ.டி ஊழியர்களை குறிவைத்து கொக்கைன் விற்ற 2 பேர் கைது: 2 சொகுசு கார்கள் பறிமுதல் appeared first on Dinakaran.