காங்கயம், ஜன.30: இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் வட்டாட்சியரிடம் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில் எல்லப்பாளையம்புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் காங்கயம் வட்டாட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையத்தில் சொந்த வீடு இல்லாத 20 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த வருடம் மார்ச் மாதம் மேற்கண்ட 20 பயனாளிகளுக்கு காங்கயம் தாலுகா, நிழலி பகுதியில் உள்ள இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடம் மணல்மேடு பகுதியாகவும், வீடு கட்ட தகுதி இல்லாத இடமாகவும் இருப்பதால் வேறு இடம் வழங்க வேண்டும் என, எல்லப்பாளையம் புதூர் ஊராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போதைய காங்கயம் வட்டாட்சியர் நேரில் வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வேறு இடத்தில் நிலம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து ஏற்கனவே வழங்கப்பட்ட அசல் பட்டாவை திரும்பக் கொடுத்து, அதன் பின்னர் வேறு இடத்தில் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தைத் தொடர்ந்து, 6 மாதங்களுக்கு முன்பு பட்டாக்களை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். ஆனால் 6 மாதங்கள் கடந்த பின்னரும், இவர்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்கவில்லை. எனவே, புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 பயனாளிகளுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்கவும், அந்த இடத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அடி இலவச வீட்டுமனை பட்டா மீண்டும்: வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் மனு appeared first on Dinakaran.