சென்னை: தமிழக சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவையின் நேரலை ஒளிபரப்பு தொடர்பாக பேசினார். பின்னர் அவரது தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அவைக்கு வெளியே தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:
எதிர்க்கட்சி வைக்கும் கோரிக்கைகளை நிராகரித்து, தொடர்ந்து எங்களை பேசுவதற்கு அனுமதிக்காமல், வேறு கட்சி தலைவர்களை மட்டுமே பேச அனுமதிப்பது எந்த வகையில் நியாயம். இதையொட்டியே அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்தோம். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசும்போது அதை நேரலை செய்கின்றனர். பிரதான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி கேட்கும் போது, அதை நேரலை செய்யாமல் அமைச்சர் மற்றும் முதல்வரின் பதிலை மட்டுமே நேரலை செய்கின்றனர். இவ்வாறு சபாநாயகர் எதற்காக ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்?
சமீபத்தில் டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதிக்க மறுத்து, அதிமுகவை வெளியேற்றிய பின்னர், எங்களை முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்கிறார். அதை அனுமதித்து நேரலையில் ஒளிபரப்பு செய்கின்றனர். அதே மக்கள் பிரச்னையை பேசும் அதிமுக எம்எல்ஏக்கள் பேச்சை நேரலையில் ஒளிபரப்பு செய்வதில்லை. அதை அவை குறிப்பிலும் பதிவு செய்வது கிடையாது. இது எந்த வகையில் நியாயம்? இது சர்வாதிகார போக்காகும்.
முதல்வர் சட்டசபையில் எங்களை பேச வாய்ப்பளித்து, அதற்குரிய பதிலை அவையில் பதிவு செய்தால் அதை நாங்கள் வரவேற்போம். எங்களது உரிமையை பறிக்கும்போது ஜனநாயக ரீதியாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். அதை கேலியும், கிண்டலும் செய்கின்றனர். இதே தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, வெளிநடப்பு செய்த காலங்களில் நாங்கள் கிண்டல் செய்தோமா? நாங்கள் மதித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேரவையில் இருந்து இரண்டாம் முறை வெளிநடப்பு
கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மீதான மானிய கோரிக்கையின் போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேசியபோது அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி ஆகியோர் குறுக்கிட்டு பதிலளித்தனர். இதில் பேச அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து அவைக்கு வெளியே எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அளித்த பேட்டியில், “எங்கள் மீது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் தொடர்ந்து முன்வைக்கின்றனர். இதற்கு உரிய பதிலை ஆதாரங்களுடன் அளிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முற்பட்டால், நாங்கள் பேசுவதற்கு அனுமதி அளிப்பதில்லை.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர்கள் உரையாற்றும் போது, அதற்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை தர சபாநாயகர் மறுக்கிறார். தமிழக சட்டசபையில் முற்றிலுமாக ஜனநாயக படுகொலை நடக்கிறது. எங்கள் ஆட்சியில் கூட்டுறவு தேர்தலை உரித்த காலத்துக்குள் முறையாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். கூட்டுறவு சங்கங்களில் ஒரு கோடி போலி உறுப்பினர்களை சேர்த்ததாகவும், இறந்துபோன 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்ததாகவும் அவையில் அமைச்சர்கள் தவறான தகவல் கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post வெளிநடப்பு ெசய்தது ஏன்..? எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.